திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி அச்சரம்பட்டியை சேர்ந்தவர் அனுஷியா (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. நேற்று இவரது தந்தையும், தாயும் வெளியில் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்தார்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவர் நேற்று மதியம் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றார். அப்போது அனுஷியா, ரத்த காயங்களுடன் மேலாடை இல்லாமல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து கிராமமக்களிடம் தெரிவித்தார். அவர்கள் கீழச்சிவல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட டிஐஜி காமினி, சிவகங்கை எஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் லைக்கா மூலம் தீவிர சோதனை நடத்தினர்.
நாய் ஊரையே சுற்றி வந்தது. எனவே குற்றவாளிகள் அதே ஊரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், ‘‘சிறுமி தனது வீட்டின் பின்புறமாக சுமார் 200 மீட்டர் தூரத்தில் உடலில் காயங்களுடன் மேலாடை இல்லாமல் இறந்து கிடந்தார். இவர் வாய் பேச முடியாதவர் என்பதால், வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீடுபுகுந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றுவிட்டு உடலை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!