குடல் அழற்சி நோயாளிகளை கொரோனா அதிகம் தாக்குமா?: செரிமான நலத்துறை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி விளக்கம்

சென்னை: குடல் அழற்றி நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா அதிகம் தாக்குமா, அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்பது குறித்த சந்தேகங்களுக்கு செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணரான டாக்டர் கே.ஆர்.பழனிசாமி  விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் குடல் அழற்றி நோயால் (ஐபிடி) பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் ஸ்டெராய்ட் மருந்துகளை நீண்ட காலத்துக்கு உட்கொள்ள வேண்டும். இதனால், அவர்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவரை நேரில் சந்திப்பதில் சிரமம் உள்ளது. இதனால், நோயாளிகளுக்கு கொரோனா தொற்று, தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை தீர்க்க செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணரான டாக்டர் கே.ஆர்.பழனிசாமி நேற்று காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 2 மணி  நேரம் நடந்த இந்த கலந்தாய்வில் மருத்துவ நிபுணர்கள் அசோக் சாக்கோ, பிரம்மநாயகம், பாலசுப்பிரமணியன், பிரேம்குமார் உள்ளிட்டோர் நோயாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். டாக்டர் கே.ஆர்.பழனிசாமி மற்றும் பிற மருத்துவர்கள் கூறியதாவது:  குடல் அழற்சி நோயாளிகளை கொரோனா நோய் அதிகம் தாக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது. ஆனால், அவர்களை கொரோனா அதிகம் பாதிக்கும் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. மற்றவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும்  அபாயம் உள்ளதோ, அதே அளவுதான் குடல் அழற்சி நோயாளிகளுக்கும் கொரோனா வரும் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆனால், கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் ஸ்டெராய்ட் மருந்து அதிகம் உட்கொள்பவர்களுக்கு அதிக பாதிப்பு  ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  ஏற்கனவே கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும். கொரோனா தொற்று தீவிரமாக  இருந்தால் அதற்காக மருத்துவத்துக்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.தேவைப்பட்டால் ஸ்டெராய்ட் மருந்துகளின் அளவை மருத்துவர் குறைப்பார். குடல் அழற்சி நோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தடையும் இல்லை. அவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனாவில் இருந்து தப்பலாம். கோவிஷீல்டு, கோக்வாக்சின்  தடுப்பூசிகளில் எது கிடைக்கிறதோ அதை போட்டுக்கொள்ளலாம். முதல் டோஸுக்கும், இரண்டாவது டோஸுக்கும் நீண்ட இடைவெளி விடாமல் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது நல்லது. தடுப்பூசி  போட்டுக்கொள்பவர்களுக்கு சில நாட்களுக்கு உடல் வலி, காய்ச்சல் வரலாம். அதற்கு, அவர்கள் பாராசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். மற்ற வலி நிவாரணிகளை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு கலந்துரையாடலில்  தெரிவிக்கப்பட்டது. குடல் அழற்சி நோயாளிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். அவர்களது சந்தேகங்களுக்கு டாக்டர்கள் பதிலளித்தனர். கருப்பு பூஞ்சைக்கு காரணம் என்ன?டாக்டர் அசோக் சாக்கோ கூறுகையில், கரும் பூஞ்சை நோய் கொரோனா நோயாளிகளை சிகிச்சையின்போதோ, சிகிச்சை முடிந்த பிறகோ தாக்குகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய்  உள்ளவர்களை தாக்கும். ஆக்சிஜன் செலுத்தும்போது பயன்படுத்தப்படும் மாஸ்க், ஹீமிடிபையர் (ஈரப்பதமூட்டி) போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட  வாய்ப்பு உள்ளது. மேலும் சுத்தமில்லாத ஆக்சிஜன் சிலிண்டர் காரணமாகவும் தொற்று ஏற்படலாம். இது மூச்சை உள்ளிழுக்கும் போது  உடலுக்குள் சென்றுவிடுகிறது. முதலில் கண்டுபிடித்தால் முழுவதும் குணப்படுத்திவிடலாம். சிகிச்சை  தராமல் விட்டுவிட்டால் 80 சதவீதம் பேர் உயிரிழந்துவிடுவார்கள். தாமதமாக சிகிச்சை பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் உயிருக்கு ஆபத்து என்றார்….

The post குடல் அழற்சி நோயாளிகளை கொரோனா அதிகம் தாக்குமா?: செரிமான நலத்துறை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: