காமராஜர் புகைப்பட கண்காட்சி

 

ஊட்டி, ஜூலை 19: காமராஜர் பிறந்த நாளையொட்டி கோத்தகிரி கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின்போது, பள்ளிக் குழந்தைகள் யாதினி, யாகினி காமராஜர் படத்தை திறந்து வைத்தனர். தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி கலாராணி முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலரும் கல்வியாளருமான ஆசிரியர் கந்தசாமி தலைமை வகித்து காமராஜர் வாழ்க்கை, விடுதலை போராட்டம், தலைவர்களுடனான நட்பு, சாதனைகள் ஆகியவற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பள்ளி குழந்தைகள் இதனை பார்வையிட்டு பல அரிய செய்திகள், பழங்கால அரசியல் சார்ந்து பல தகவல்களை கற்றனர். மேலும் பேச்சு, கட்டுரை, விடுகதைகள், திருக்குறள், கதைக் கூறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், காமராஜர் வரலாற்றை விளக்கும் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பள்ளியில் குழந்தைகளின் திறன்களை வளர்த்து வெளிக் கொணரும் வகையில் இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது. இதில், முதலமைச்சராக யாழினி, சபாநாயகராக பவதாரணி, பிற அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பணிகள் செயல்பாடுகள் குறித்து கூறப்பட்டது.

தொடர்ந்து, குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் வாசிப்பு மன்றமும் துவங்கப்பட்டது. முதலில் மாற்றுத் திறனாளி குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் சார்ந்த வேற்றுமையை ஒழிப்போம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக சமூகவியல் ஆசிரியர் பாலசுப்ரமணி வரவேற்றார். இறுதியில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கணித ஆசிரியை ரெனிதா பிரபாவதி, தற்காலிக ஆசிரியைகள் ரஞ்சிதா, துர்கா ஒருங்கிணைத்தனர்.

The post காமராஜர் புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: