கள்ளக்குறிச்சி, ஏப். 17: கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில் குற்றப்பத்திரிகையில் விடுபட்ட வழக்கு ஆவணங்களை கேட்டு தாய் அளித்த மனுவின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி (17) பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேரில் வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய இரண்டு பேரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் இருந்து சிபிசிஐடி போலீசார் நீக்கினர். இதில் ஆட்சேபனை இருந்தால் கருத்து தெரிவிக்க மாணவியின் தாய் செல்விக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. மேலும் குற்றப்பத்திரிகையில் விடுபட்ட வழக்கு ஆவணங்கள், பள்ளி வளாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வு அறிக்கைகளை வழங்ககோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் துவங்கப்பட்ட நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி மதியின் தாய் செல்வி, மாணவியின் தந்தை ராமலிங்கம் மற்றும் இவர்களது தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இருவரையும் மீண்டும் வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும். வழக்கில் தொடர்புடைய மேலும் சில முக்கிய சிசிடிவி காட்சி ஆதாரங்களை தங்கள் தரப்பிற்கு வழங்க வேண்டும் என தனது வாதத்தை முன்வைத்தார். இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில் குற்றப்பத்திரிகையில் விடுபட்ட ஆவணங்களை கேட்டு தாய் மனு appeared first on Dinakaran.