கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் 115 பயனாளிகளுக்கு ரூ.6.37 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தூத்துக்குடி, செப். 5: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 115 பயனாளிகளுக்கு ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகைதந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்திற்கு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் குறித்து, துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கடந்த 4 மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த கோரிக்கைகள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை துறை, தோட்டக்கலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சுயஉதவி குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், மானிய விலையில் வெங்காய விதைகள், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் ஆணைகள், தீவனப் புல் விதைகள், பயணியர் வாகனம், மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் என 115 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 37 லட்சத்து 69 ஆயிரத்து 386 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு செயலர் தாரேஷ் அகமது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ் (வைகுண்டம்), மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ் குமார் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விரைவில் முதல்வர் ஆய்வுக்கு வருவார்
ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறுகையில், மாவட்ட வாரியாக வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறேன். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை தமிழக முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். விரைவில் தமிழக முதல்வரும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார், என்றார்.

‘அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருங்கள்’
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலியன் பேசியதாவது: முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின்கீழ் பெறப்படும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சரின் கிராம சாலைகள் என்ற திட்டத்தில் கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு உள்ள பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு வைத்து கொள்ளுங்கள். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறது. கல்வியை பொறுத்தவரை முதலமைச்சர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டார். எனவே புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட பணிகளை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணாக்கர் மீது கவனம் செலுத்த வேண்டும். அரசு பல்வேறு முற்போக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்துமே மக்களை சென்றடைவது உங்களுடைய செயல்பாட்டில்தான் உள்ளது. எனவே அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி பெண் கைக்குழந்தையுடன் 3 சக்கர சைக்கிளில் நிற்பதை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அப்பெண் அருகில் சென்று மனுவை பெற்றார். அப்போது கடந்த 12 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டு மனு அளிப்பதாகவும், ஆனால் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். தொடர்ந்து பலரும் மனு அளித்தனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் 115 பயனாளிகளுக்கு ரூ.6.37 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: