ஜிஎஸ்டி அமலான பிறகு மருந்துகள் விலை உயர்வு ; தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

வேலூர் : ஜிஎஸ்டி அமலான பிறகு மருந்துகள் விலை உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1500 மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 2 ஆயிரம் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழக மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. கடந்த ஆண்டு மட்டும் ரூ500 கோடிக்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மருந்துகள் விலை சற்று அதிகரித்திருப்பது உண்மையே. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு மருந்துகள் விலை சற்று உயர்ந்துள்ளது.

ஆனால் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. 2018-19ம் கல்வி ஆண்டில் மதுரை, திருச்செந்தூர், கரூர் ஆகிய இடங்களில் மொத்தம் 170 எம்பிபிஎஸ் இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும்.  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் அதாவது 1000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: