ஒரு ராஜ்ய சபா சீட்டால் ஒட்டுமொத்தமாக தேனிக்காரரின் ஆதரவாளர்கள் அணி மாறிய ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா

‘‘எந்த ஆதாரத்தை கொடுங்கள் என்று மாங்கனி மாவட்டத்தில் இலை தொண்டர்கள் கேட்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒற்றை தலைமையை பிடிக்க சேலம்காரரும்… இரட்டை தலைமை தான் என்று ேதனிக்காரரும் விடப்பிடியாக இருக்காங்க. சேலம்காரர் ஒரு வியூகத்தை வகுத்தால்… தேனிக்காரர் வேறு வகையில் அந்த வியூகத்தை செயல் இழக்க வைக்கிறாராம். அதற்கு பொதுக்குழு தீர்மானம் முழுவதையும் தேனிக்காருக்கு பயந்து ரத்து செய்ததை சொல்றாங்க. இப்போது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தையும் பயந்து போய் அவசர அவசரமாக நடத்தி முடித்து இருக்கிறார்கள். தற்போதைக்கு சேலத்து மாஜி விவிஐபியின்  கை ஓங்கியிருக்காம். இதனால் தேனியின் ஆதரவாளர்கள் கொடநாடு பத்தி பேச  ஆரம்பிச்சிருக்காங்களாம். இதனால் டென்ஷனான சேலம் கோஷ்டியோ, ‘‘கொடநாட்டிற்கும், எங்க தலைவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதாரம்  இருந்தா அவர பிடிச்சு உள்ளே போடவேண்டியது தானே… அவரு கை சுத்தம், அவரை  யாரும் தொடவே முடியாது, வேண்டாதவர்கள் கிளப்பி விடும் புரளியை யாரும்  நம்பமாட்டாங்கன்னு அடிச்சு சொல்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தனக்கு தானே தலைவலியை வரவழைத்து கொண்டாராமே தேனிக்காரர்.. அப்படி என்ன நடந்துச்சு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடற்கரையோர  மாவட்ட இலைக்கட்சி வட்டாரத்தில், தேனிக்காரரின் கையே துவக்கத்தில் ஓங்கி  இருந்ததாம். நிர்வாகிகளில் முக்கிய தலைகள் எல்லாம் அவரையே ஆதரித்த  நிலையில், தென்மாவட்டத்தில் தனக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்துவதற்காகவே,  கட்சிக்கு கிடைத்த 2 மாநிலங்களவை எம்பி சீட்டில் ஒன்றை வாங்கி தன்  ஆதரவாளரான ‘‘தர்மமானவருக்கு’’ தேனிக்காரர் கொடுத்தார். ஏற்கனவே அவர்களது  முக்கிய ஆதரவாளர்களில் சிலர், தங்களுக்கே சீட் கொடுப்பார் என நிறைய எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். கடைசியில் வேறொருவருக்கு கை மாறியதும், நெருங்கிய  ஆதரவாளர்களும் சேலத்துக்காரர் பக்கம் கரை சேர்ந்து விட்டனராம். கட்சியில்  தன் பலத்தை வலுப்படுத்த திட்டமிட்டு தேனிக்காரர் எடுத்த முடிவு, தற்போது  அவரையை தேனீ கொட்டியது போல மனஉளைச்சலுக்கு ஆளாகி விட்டதாம். இதனால்  கடற்கரையோர மாவட்டம் முதல் தூங்காநகரம் வரை தென்மாவட்டங்களில் பலர் அணி  மாறி விட்டனர். தென் மாவட்டங்கள் தனக்கே என தம்பட்டம் அடித்தவர் தற்போது  அதிர்ச்சியில் உள்ளாராம். இது எல்லாத்துக்கும் காரணம், ஒற்றை எம்பி சீட் விஷயம் தான் காரணம் என்கிறார்கள் தேனிாகாரருடன் நெருக்கமாக உள்ளவர்கள். எனினும் விடா முயற்சி விஸ்வரூப வெற்றியாக மீண்டும் தனது ஆதரவாளர்கள் பலரை, தனித்தனியாக தொடர்பு  கொண்டு பேசி வருகிறார். கிளம்பி சென்றவர்களை எப்படியும் தன் வழிக்கு கொண்டு  வந்து விடுவேன் என்கிறாராம். எதிர்ப்பை பதிவு செய்வதற்காக கடற்கரை  மாவட்டத்தில் சில இடங்களில், ேசலத்துக்காரரை கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடந்திருக்கிறதாம்.  மேலும், தன் பழைய விசுவாசிகளை சரிகட்ட தன் வாரிசுகளை களம் இறக்கினால் எல்லா பிரச்னைகளையும் சரிகட்டி விடலாம் என்று நினைப்பதாக அடிபொடிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தொலை தூர கல்வி ஒரு அதிகாரியால் ெதால்லை தரும் கல்வி துறையாக மாறிவிட்டதாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர்  பல்கலையின் தூரமான  படிப்புத் துறையில் தலைமையானவராக ஆண்டவர் என முடியும்  பெயர் கொண்டவர்  இருக்கிறார். இவர் இலைக்கட்சி முன்னாள் மந்திரியான ஆயுத  பெல்லுக்கு  ரொம்பவும் நெருக்கமானவராம். கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது  கல்லாக்கட்டும்  இப்பொறுப்பை, ஆண்டவர் வேண்டி விரும்பி பெற்றுள்ளார்.  இதுவரை பல லட்சங்கள்  வரை கலெக்சன் செய்துள்ளாராம். அதே போல் சேர்ந்து ஒரு  முறையே தேர்வெழுதும்  மூன்றே மாதங்களில் முடிக்கும் வகுப்புகளுக்கு  ஒப்புதல் வாங்கிய  விசயத்திலும் பல லட்சம் வசூல் பார்த்துள்ளார். மேலும்,  தனியார் வங்கியில்  பல்கலைக்கழக கணக்கை துவக்கியதற்கு அன்பளிப்பாக  வங்கியினரே சொகுசு கார்  பரிசு கொடுத்திருப்பதும் ஆச்சர்யத்தை தந்துள்ளது.  கடந்த ஆட்சிக்காலத்தில்  கோவை மாவட்டத்தில் ஒரு வணிக வளாகத்தை புதிதாக  வாங்கி இருக்கிறார். இவர்  மீது பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றுள்ளதால்,  தற்போதைய அரசு இவர் மீதான  நடவடிக்கைக்கு தயாராகி இருக்கிறது.  இந்நிலையில், தாமரைக் கட்சியின்  ‘‘முக்கிய தலைவரை’’ நெருங்கி, அங்குள்ள  உயர்மட்டத்தினர் வழியாக  நடவடிக்கையில் இருந்து தப்பவும் முயற்சி  எடுத்திருக்கிறாராம்…’’  என்றார் விக்கியானந்தா. ‘‘கோவையில் நடந்த காக்டெயில் பார்ட்டி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ கோவை   மாநகராட்சி அலுவலகத்தில் பொருட்கள் வாங்கும் பிரிவில் இளநிலை உதவியாளராக கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வந்த   ஒரு ஊழியர், பணி நிறைவு விழா என்ற பெயரில் தன்னுடைய சொந்த செலவில்   பொதுப்பிரிவில் பணிபுரியும் பெண் ஊழியர்களை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா   அழைத்துச்சென்றுள்ளார். இவருக்கு உதவியாக மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஐந்து   எழுத்து பெயர் கொண்ட ஒரு உதவி கமிஷனர் இருந்துள்ளார். அவர்தான் எல்லா   ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். பெண் ஊழியர்கள் தனியாகத்தான் வர   வேண்டும் என கண்டிஷன் போட்டு, தனியார் பேருந்தில் ஊட்டிக்கு   அழைத்துச்சென்றுள்ளனர். ஊட்டி லாட்ஜில் ரூம் போட்டு, மது விருந்து   நடத்தியுள்ளனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அஜால், குஜால்   வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இப்படி ஒரு பணி   நிறைவு ஆட்டத்தை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை என சில பெண் ஊழியர்கள்   பெருமை அடித்துள்ளனர். பணி நிறைவு பெற்ற அந்த ஊழியர், உதவி புரிந்த உதவி   கமிஷனர் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி, ஒழுங்கு   நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகராட்சி ஊழியர்கள் கோரிக்கை   விடுத்துள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா….

The post ஒரு ராஜ்ய சபா சீட்டால் ஒட்டுமொத்தமாக தேனிக்காரரின் ஆதரவாளர்கள் அணி மாறிய ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: