ஐஆர்பிஎன் போலீசாரை தடுத்து மீனவர்கள் சாலை மறியல்

பாகூர், செப். 12: கட்டுமானப்பணி ஆய்வுக்கு வந்த ஐஆர்பிஎன் போலீசாரை தடுத்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி இந்திய ரிசர்வ் பட்டாலயன் படை (ஐஆர்பிஎன்) பிரிவுக்கு கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை மீனவ கிராமத்தில் கடந்த 2003ம் ஆண்டு சுமார் 96 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், பட்டாலியன் போலீசாருக்கு, தலைமையகம், குடியிருப்புகள், பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த திட்டத்திற்கு, நரம்பை மீனவ கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக, அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் அதனை மீறி, ஐஆர்பிஎன் போலீசார் டெண்ட் கொட்டகை அமைத்து கண்காணித்து வந்தனர். இதனிடையே, அப்போது பதவியில் இருந்த அமைச்சர்கள், மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இது தொடர்பாக, கவர்னர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், மீனவ மக்கள் அதற்கு உடன்படவில்லை. அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் நரம்பை கிராமத்தில் பட்டாலியன் மையம் வராது என வாக்குறுதி அளித்திருந்தனர்.

இந்நிலையில், சுமார் 20 ஏக்கர் நிலம் சுற்றுலா துறைக்கும், உண்டு உறைவிடப்பள்ளி திட்டத்திற்காக இடம் ஒதுக்கப்பட்டது. மீதி இருந்த இடத்தை நரம்பை கிராம மக்களின் எதிர்கால தேவைக்காக பயன்படுத்தி கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே ஆய்வு பணிக்காக ஐஆர்பிஎன் துணை கமாண்டன்ட் சுபாஷ், உதவி கமாண்டண்ட் ரிஸ்வா சந்திரன், செந்தில்முருகன், ராஜேஸ் மற்றும் பட்டாலியன் அதிகாரிகள் நேற்று காலை நரம்பை கிராமத்திற்கு வந்திருந்தனர். இதையறிந்த கிராம மக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், மீனவ கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமிகாந்தன் நரம்பை கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது, எம்எல்ஏவுக்கும், பட்டாலியன் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் எம்எல்ஏ, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, பட்டாலியன் போலீசார் ஆய்வு பணிகளை செய்யாமல் திரும்பினர். தொடர்ந்து, லட்சுமிகாந்தன் எம்எல்ஏ, மீனவ மக்களிடம் பேசும்போது, கடந்த பட்ஜெட்டில்கூட முதல்வர், இங்கு கடல்சார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றார். மேலும் சுற்றுலா திட்டம், மீன்வள துறையின் மூலமாக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இருந்தது. இந்த பிரச்னை மீண்டும் வராத அளவுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்க துணையாக நிற்பேன். இது தொடர்பாக, ஊர் பஞ்சாயத்தாருடன், முதல்வர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post ஐஆர்பிஎன் போலீசாரை தடுத்து மீனவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: