‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின்படி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற எடை, உயரம் இல்லாமல் மெலிந்து காணப்படுதாக கிடைத்த புள்ளிவிவரங்களை தொடர்ந்து, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனை பாதுகாத்திட, ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒருங்கிணைந்து, 6 வயத்துக்கு உட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2127 அங்கன்வாடி மையங்களில் உள்ள 1,43,455 குழந்தைகளில், 40,573 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. எனவே, ஊட்டச்சத்து குறைபாடுகள் குழந்தைகளுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே 593 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள குழந்தைகள் நல மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடுகள் குழந்தைகளை பரிசோதிக்கும் சிறப்பு மருத்துவ முகாமை நேற்று கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். இந்த முகாமை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், தங்களுடைய 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், டிஆர்ஓ பிரியதர்ஷினி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்….

The post ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின்படி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்-கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: