உழவர்சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர், மே 26: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் சார்ந்த உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், கட்டமைப்புகள், அக்மார்க் ஆய்வகம் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர் உழவர் சந்தையில் காய்கறி வரத்து, விலை நிர்ணயம், மற்றும் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்குதல் இயந்திரம் பற்றி வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) வித்யா மாவட்ட ஆட்சியருக்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உழவர் சந்தை கடைகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மகளிர் குழு கடைகளை ஆய்வு மேற்கொண்டார்.

உழவர் சந்தையில் உள்ள நடைபாதையை சரி செய்யும் படி உதவி பொறியாளர் கலைமாமணிக்கு கலெக்டர் அறிவுறுத்தினார் அப்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்து கொடுக்கும்படி அவர் உத்தரவிட்டார். காய்கறி கழிவுகளை உரமாக்குதல் இயந்திரம் பற்றி முழுமையாக விரிவாக உழவர் சந்தை நிர்வாக ஜெய்ஜிபால் எடுத்துரைத்தார். மேலும் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரத்தின் தூளாக்கும் இயந்திரத்தை சரி செய்யும் படி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

அக்மார்க் ஆய்வகத்தை ஆய்வு மேற்கொண்டு செயல்பாடுகளை கேட்டு அறிந்தார். அக்மார்க் வேளாண்மை அலுவலர் கனிமொழி அக்மார்க் திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஒழுங்குமுறை விற்பனை வளாகத்தில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளீட்டு கடன்கள் பெற்ற விவசாயிகளின் நெல்மூட்டைகளை விரிவாக ஆய்வு செய்தார்.
விற்பனை கூட வளாகங்கள் செயல்படும் விதம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பற்றி செயலாளர் சரசு விளக்கி கூறினார். மேற்கண்ட ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா, கண்காணிப்பாளர் முருகானந்தம், அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள் அமரேசன், மோனிஷா விற்பனை கூட மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.

The post உழவர்சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: