உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன

*100 நாட்களில் தீர்வு காணப்படும் * மு.க.ஸ்டாலின் பேச்சுசென்னை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி மூலம் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி வாயிலாக தமிழகம் முழுவதும் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட பெட்டி கொண்டு வரப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ேபசியதாவது கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கும் – நம்மை என்றைக்கும் இயக்கும் நம்முடைய தலைவர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுர இல்லத்தின் வாசலில், நான் ஒரு சபதம் ஏற்றேன். சபதம் மட்டுமல்ல; ஒரு உறுதிமொழியையும் நான் ஏற்றுக் கொண்டேன். தமிழகத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்னைகளை, நாம் ஆட்சிப் பொறுப்பேற்று, அடுத்த 100 நாட்களில் அந்த அடிப்படைப் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும். அதுவும் நாம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அந்தத் திட்டத்திற்கான பயணத்தை தொடங்கினேன். கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி அறிவித்து, 29ம் தேதி திருவண்ணாமலையில் தான் அந்த பயணத்தை நான் தொடங்கினேன். அதைத்தொடர்ந்து 187 தொகுதிகளில் என்னுடைய சுற்றுப் பயணத்தை நான் நடத்தி இருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் செல்லவேண்டும் என்று தான் முடிவு செய்து அந்த பயணத்தைத் தொடங்கினேன். 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் நான் வலம் வந்திருக்கிறேன். இன்னும் மீதம் இருப்பது 47 தொகுதிகள் தான். அந்த தொகுதிகளில் மனுக்களை நேரடியாக சென்று என்னால் பெற முடியவில்லை. ஆனால் அந்த 47 தொகுதிகளில் நான் செல்லாமலேயே மனுக்களை வாங்கும் பணி தொடங்கியிருக்கிறது. விரைவில் அறிவாலயத்திற்கு அந்தப் பெட்டிகள் வந்து சேர இருக்கின்றன.திருவண்ணாமலையில் ஜனவரி மாதம் 29ம் தேதி தொடங்கி, சென்னையில் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையில் அந்தப் பயணத்தை நடத்தியிருக்கிறோம். 32 மாவட்டங்களில் இருக்கும் 187 தொகுதிகளில் மக்களை சந்தித்து இருக்கிறோம். 38 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இணையதளம் மூலமாகவும் – நேரடியாகவும் பெறப்பட்டிருக்கிறது.மே 2ம் தேதி உறுதியாக, எந்தவித ஐயப்பாடும் இல்லாமல், எந்தவித சந்தேகமும் இல்லாமல், ஒரு இம்மி அளவிற்கு கூட சந்தேகமில்லாமல் நாம் தான்-திமுக தான் ஆட்சிக்கு வரப் போகிறது. அதில் எந்த விவாதத்திற்கும் இடம் இல்லை.எனவே ஆட்சி அமைந்ததற்கு பிறகு அடுத்த நாள் இந்தப் பெட்டிகள் எல்லாம் திறக்கப்படும். திறக்கப்பட்டு தமிழக மக்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.இன்றைக்கு திமுகவின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து, இந்த மனுக்களை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். கலைஞர் அடிக்கடி சொல்வார், “சொன்னதைச் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம்” என்று, அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலினும் “சொன்னதைச் செய்வேன் செய்வதைத் தான் சொல்வான்” அந்த வழிநின்று நிச்சயமாக 100 நாட்களில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.எப்படி இதை செய்யமுடியும் – நிறைவேற்ற முடியும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் இதற்கென்று ஒரு தனி துறை உருவாக்கப்படும்.மாவட்ட ரீதியாக பிரித்து, அதை பரிசீலித்து, தொகுதி வாரியாக – ஊராட்சி வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டு இவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம். இதற்கென்று நியமிக்கப்படும் துறை, அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் இந்த வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. இதை முடித்துவிட்டு, இதெல்லாம் முடித்துவிட்டோம் என்று 100 நாட்களுக்குள் எங்களிடத்தில் வந்து சொல்ல வேண்டும். எனவே அ.தி.மு.க. செய்த தவறுகளை, தி.மு.க. ஆட்சி சரிசெய்யும் என்ற நம்பிக்கையை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிவடைகிறபோது, நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். தமிழகத்தில் இதனால் 1 கோடி குடும்பங்கள் நிச்சயமாக பயன் பெறும். 1 கோடி குடும்பங்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கும்.நாளைய தினம்(இன்று) கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக நான் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருக்கிறேன். வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு நேராக கலைஞர் பிறந்த திருவாரூருக்கு தான் செல்கிறேன். தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். கலைஞருடைய அந்த திருவாரூர் தொகுதியில் இருந்து தான் என்னுடைய பிரசார பயணம் தொடங்கப்படவிருக்கிறது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த தேதி, எந்தெந்த மாவட்டம் என்பது அறிவிக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற அந்த நிகழ்ச்சியை முடித்து இருக்கிறோம். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் அந்த பிரசார பயணத்தை நடத்தி இருக்கிறோம்.கடந்த 6 மாதங்களாக பல முறை. ஒரு முறை அல்ல, பலமுறை தமிழ்நாட்டை குறுக்கும் நெடுக்குமாக நான் சுற்றி வந்திருக்கிறேன். அந்த அளவிற்கு பிரசாரம் நடந்து இருக்கிறது. எனவே இன்னும் இருப்பது மிக குறைவான நாட்களே. எனவே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரு பக்கத்தில் பிரசாரத்தை தொடங்கிவிருக்கிறார்கள். திமுக முன்னணியினர் ஒரு பக்கத்தில் பிரசார பயணத்தை தொடங்கவிருக்கிறார்கள். எனவே இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். 10 ஆண்டு காலமாக இந்த தமிழகம் பாழ்பட்டு போய்விட்டது. பாழ்பட்டுப்போயிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்று திரள்வோம். இவ்வாறு அவர் கூறினார்….

The post உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன appeared first on Dinakaran.

Related Stories: