இவர்கள் ஆசீர்வாதம் முக்கியம்!

அடியார்களை வீட்டுக்கு அழைத்து வந்து அன்னம் இடுவது மிகப்பெரிய புண்ணியம். அதுவும் நமக்கு குடும்பத்தில் பல்வேறு சங்கடங்கள், குழப்பங்கள் இருந்தால், ஒரு அடியாரை அழைத்து வந்து பூஜிப்பது, அன்னதானம் செய்வது மிகப் பெரிய பரிகாரம் ஆகும். வைணவத்தில் இதை ததியாராதனம் என்பார்கள். ஆராதனாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததி ஆராதனம் நிருப: என்று ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தில், ஒரு பாகவதரை வீட்டுக்கு அழைத்து வந்து, அவருக்கு கால் கை அலம்ப தீர்த்தம் கொடுத்து உள்ளே, இருக்கையில் அமர வைத்து, முறையாக உணவு பரிமாறி, பின் அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவது என்பது சாட்சாத் பகவானையே பூஜிப்பது போல் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. அப்படிப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது என்பது சரிதான். ஆனால், சில இடங்களில் ஒரு சின்ன விஷயத்தை நாம் தெரிந்தோ தெரியாமலோ தவறுதலாகச் செய்து விடுகின்றோம். அது நாம் செய்த புண்ணியத்தைக் கெடுத்து விடுகின்றது. அதுமட்டுமல்ல அந்தப் பெரியவர்களுடைய ஆசியையும் குறைத்து விடுகின்றது. இதை மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெரியவர், ஒரு உதவியாளரிடம் ஒரு செய்தியைச் சொல்லி, இன்னாரிடம் சொல் என்று அனுப்பிவைத்தார். அவரும் போய் அந்தச் செய்தியை சொல்லிவிட்டு வந்தார். சோர்வாக இருந்த அவரிடம் பெரியவர் கேட்டார்; “சோர்வாக இருக்கிறாயே… சிரமப் பரிகாரத்திற்கு ஏதேனும் தந்தார்களா?” “இல்லை. நீங்கள் சொன்ன செய்தியைச் சொல்லிவிட்டு வந்து விட்டேன்” என்று சொன்னார். பெரியவர் மனம் வருந்தினார். இது ராமானுஜருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது. ஒருமுறை இராமானுஜர் திருமலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு திருமலை யாத்திரையை மேற்கொண்டார். உடனே தமது சீடர் குழாத்தோடு திருமலைக்குப் புறப்பட்டார். செஞ்சி அருகே பருத்திக் கொல்லை என்ற ஒரு சிற்றூர் இருக்கிறது. போகும் வழியில் அங்குள்ள சீடர்களைச் சந்திக்க வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார்.பருத்திக்கொல்லை ஊரிலே எச்சான் என்ற மிகப்பெரிய செல்வந்தர் இருந்தார். அவர் ராமானுஜரிடம் பேரன்பு பூண்டவர். அதே ஊரிலேயே வரதாச்சாரியார் என்கிற ஒரு பரம ஏழையும் இருந்தார். ராமானுஜர், எச்சான் என்கிற செல்வந்தர் வீட்டில் தங்கிவிட்டுச் செல்ல நினைத்தார். காரணம், நிறைய சீடர்கள் குழாம் இருப்பதினால் அவ்வளவு பேருக்கும் உணவிட ஓரளவு வசதி வேண்டும் அல்லவா… அவரும் ரங்கம் வரும்போது பலமுறை ராமானுஜரை அழைத்திருக்கிறார்.ஆகையினால், அவருக்கு முன்கூட்டியே தாம் வரும் தகவல் சொல்ல ஒரு சீடரை அழைத்து, “நீ சென்று இத்தனை சீடர்களோடு வருகின்றேன் என்று தகவலைத் தெரிவித்து விட்டு வா’’ என்றார். அந்தச் சீடனும் ராமானுஜரின் செய்தியோடு விரைந்து புறப்பட்டு எச்சான் திருமாளிகை அடைந்தார். எச்சான் அப்பொழுது வீட்டில் அமர்ந்திருந்தார். ராமானுஜரிடம் இருந்து வருகிறேன்.. என்று சீடர் சொல்லியவுடனே, அவர் எழுந்து அந்தச் சீடருக்கு ஆசனம் அளித்து, அவருக்கு ஏதேனும் சிரமப் பரிகாரம் செய்ய, ஒரு வாய் தீர்த்தமாவது தந்திருக்க வேண்டும். ராமானுஜர் மீது இருந்த மரியாதையும், பற்றுதலும் அவரிடமிருந்து வந்த ஏழைச் சீடரிடம் இல்லை. அவருக்கு ஒரு வாய் தீர்த்தம் கூட தராமல், “அதனாலென்ன, நான் பெரிய ஏற்பாடுகள் செய்து வைக்கிறேன். விதவிதமாக விருந்து வைக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவிக்கச் சொல்லிவிட்டு, தன்னுடைய உதவியாளர்களை அழைத்து வீட்டை அலங்கரிக்கச் சொன்னார். நிறைய பொருள்களை வாங்கி சமைக்கச் சொன்னார். சற்று நேரம் நின்று பார்த்த இந்த சீடர், வெகுதூரம் நடந்து வந்த சோர்வுடன் இனி இங்கு நிற்பதால் பயனில்லை என எண்ணி வழியிலே இருந்த ஒரு குளத்தில் ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு, ராமானுஜர் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். இவர் வாட்டத்தோடு வருவதைக் கண்ட ராமானுஜர், “என்ன போய்ச் செய்தியைச் சொன்னாயா”  என்று கேட்டார். “ஆம். செய்தியைச் சொன்னேன். எச்சானுக்கு தாங்கள் வருவது குறித்து ஏக மகிழ்ச்சி. தடபுடலாக ஏற்பாடுகள் செய்கின்றார்.” என்றார். அடுத்த கேள்வி ராமானுஜர் கேட்டார்; “அது சரி, நீ மிகவும் களைப்பாக இருக்கிறாயே.. அவர் உன்னை கவனிக்கவில்லையா?  ஏதேனும் சிரமப் பரிகாரத்துக்கு, தாக சாந்திக்கு எதுவும் தரவில்லையா?” என்று வெளிப்படையாகவே கேட்க, சீடர் தலையைக் குனிந்துகொண்டார்.எச்சானின் செல்வத்தைக் கேள்விப்பட்ட அவருடைய சீடர்கள், இன்னும் சற்று நேரத்தில் நாம் அவருடைய திருமாளிகைக்குப் போகின்றோம். நமக்கு மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது என்றெல்லாம் ஆவலோடு இருந்தார்கள். ஆனால், ராமானுஜர் அடுத்த நிமிடமே தன்னுடைய சீடர்களுக்கு சொன்னார்; “நாம் எச்சான் வீட்டுக்குச் சென்று அவருடைய உபசாரத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. ஒரு பாகவதரை மதிக்கத் தெரியாதவர், வீட்டில் உணவு உட்கொள்வது என்பது சரியல்ல. எனவே ஏழையாக இருந்தாலும், இதே ஊரிலேயே வரதாச்சாரியார் என்கிற பாகவதர் இருக்கிறார். அவருடைய வீட்டிற்குச் சென்று நாம் இளைப்பாறுவோம்” என்று சொல்லிவிட்டார். இதை அறிந்த எச்சான் தன் வீட்டுக்கு ராமானுஜர் வராததை எண்ணி வருத்தப்பட்டார். அப்பொழுதுதான் அவருக்கு, தான் செய்த தவறு புரிந்தது. “அதற்குப் பிராயச்சித்தம் என்ன?” என்று ராமானுஜரிடம் கேட்டபொழுது ராமானுஜர் சொன்னார்; “எந்த பாகவதரிடம் அவசரப்பட்டாயோ அவர்களிடமே பிராயச்சித்தம் தேட வேண்டும்.  பாகவதர்கள் திருப்பரிவட்டத்தை (அதாவது அவர்களுடைய ஆடைகளை) துவைத்து நீ கைங்கர்யம் செய்ய வேண்டும். இதுவே பிராயச்சித்தம்” என்றார். இதிலே ஒரு முக்கியமான குறிப்பு அடங்கியிருக்கிறது. பகவானிடம் நாம் தவறு செய்தால், ஒரு பாகவதரிடம் அண்டி, அவர்களுக்குத் தொண்டு செய்து, நாம் பகவத் அபசாரத்திலிருந்து தப்பித்து விடலாம். ஆனால், ஒரு பாகவதரிடம் அவசரப்பட்டு விட்டால் எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும், எத்தனை மகான்களிடம் ஆசி பெற்றாலும் அது பயன் இல்லாமல் போய்விடும். நம்முடைய பல கஷ்டங்கள் மகான்களிடம் போய் ஆசி வாங்கியும் தீராமல் இருப்பதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கும். ஆகையினால் நாம் பெரியவர்களை மட்டுமே மதிப்பாக நினைப்பதோடு, பெரியவர்களுடன் இருக்கக்கூடிய பல எளிய மனிதர்களையும் நாம் நல்லமுறையில் உபசாரம் செய்து கவுரவிக்க வேண்டும். அவர்களது ஆசிர்வாதமும் மிக முக்கியமானது.தொகுப்பு: தேஜஸ்வி

The post இவர்கள் ஆசீர்வாதம் முக்கியம்! appeared first on Dinakaran.

Related Stories: