இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வு: ஆன்லைன் தேர்வு இனி கிடையாது; தமிழக அரசு உத்தரவு

சென்னை: பாலிடெக்னிக், கல்வியியல், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பருவத்தேர்வுகள் பல்கலை மற்றும் கல்லூரிகளில் நேரடி எழுத்துத் தேர்வாக நடத்த வேண்டும். இனிமேல், ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தக் கூடாது என்று அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதனால், அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் இனி கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் நேரடியாக நடத்தப்படும். மாணவர்கள் நேரடியாக தேர்வு மையத்தில் தான் இனி தேர்வு எழுத முடியும். கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டு ஆன்லைன் வழியாகவே தேர்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தொற்று பரவல் குறைந்த நிலையில் தமிழகத்தில் கடந்த செப்.1ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான பருவத் தேர்வுகள்(செமஸ்டர்) நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் பருவத் தேர்வுகளை நேரடி எழுத்துத் தேர்வாக நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை. கொரோனா அச்சம் மற்றும் கனமழை தொடரும் நிலையில் கல்லூரிகளில் எழுத்துத் தேர்வு நடத்துவது தற்போது மிகவும் சிக்கலானது. எனவே பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான டிசம்பர் மாத பருவத்தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் மாணவர்கள் தினசரி கல்லூரிக்கு வந்து செல்லும் நிலையில், தேர்வை மட்டும் ஆன்லைனில் எழுத வேண்டும் என்று கேட்பது சரியில்லை. எனவே, தினசரி கல்லூரிக்கு வருவதுபோல, செமஸ்டர் தேர்வையும் கல்லூரி, பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து எழுத வேண்டும் என்று பல்வேறு நிலைகளில் இருந்து அரசுக்கு வலியுறுத்தல்கள் வந்தது. இதையடுத்து, வெகு நாட்களுக்கு நேரடி எழுத்துத் தேர்வை ஒத்தி வைத்துக்கொண்டே இருக்க முடியாது. இது மாணவர்களின் கற்கும் திறனை பாதிக்கும். கல்லூரிகளை திறந்து வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும்போது எழுத்துத் தேர்வு முறையை தொடங்க இதுதான் சரியான நேரமாக இருக்கும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறி உள்ளார். இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், பொறியியல், கல்வியியல் கல்லூரிகளில் அனைத்து தேர்வுகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடியாக எழுத்துத் தேர்வு முறையில் நடத்தப்பட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.இதனால், மாணவர்கள் இனிமேல் ஆன்லைனில் தேர்வு எழுத முடியாது. செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் நேரடியாக பல்கலைக்கழக தேர்வு மையம், கல்லூரி தேர்வு மையத்துக்கு வந்துதான் தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது….

The post இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வு: ஆன்லைன் தேர்வு இனி கிடையாது; தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: