இந்தியாவுக்கு 420 ரன் இலக்கு

சென்னை: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு 420 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. கேப்டன் ரூட் 218 ரன், சிப்லி 87, ஸ்டோக்ஸ் 82 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின், பும்ரா தலா 3, இஷாந்த், நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன் எடுத்திருந்தது. பன்ட் 91 ரன், புஜாரா 73 ரன் விளாசினர். வாஷிங்டன் 33, அஷ்வின் 8 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.பொறுப்புடன் விளையாடிய இருவரும் 7வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தனர். வாஷிங்டன் அரை சதம் அடித்தார். அஷ்வின் 31 ரன் (91 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர் (நதீம், பும்ரா டக் அவுட், இஷாந்த் 4). இந்தியா முதல் இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (95.5 ஓவர்). பந்துவீச்சில் முத்திரை பதிக்கத் தவறிய வாஷிங்டன், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன் (138 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் பெஸ் 4, லீச், ஆர்ச்சர், ஆண்டர்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணிக்கு பாலோ ஆன் வழங்காமல், 241 ரன் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அஷ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 178 ரன்னுக்கு சுருண்டது (46.3 ஓவர்). கேப்டன் ரூட் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். சிப்லி 16, லாரன்ஸ் 18, போப் 28, பட்லர் 24, பெஸ் 25 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் அஷ்வின் 17.3 ஓவரில் 2 மெய்டன் உட்பட 61 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். நதீம் 2, இஷாந்த், பும்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 420 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்துள்ளது. ரோகித் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். கில் 15 ரன், புஜாரா 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 381 ரன் தேவை என்ற நிலையில், இந்திய அணி இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது. ‘பேட்டிங்கில் அசத்தினார் வாஷிங்டன்’கடந்த மாதம் ஆஸி.க்கு எதிராக டெஸ்டில் அறிமுகமான வாஷிங்டன் பிரிஸ்பேனில் அரைசதம் விளாசினார் (62 ரன்). இப்போது இந்தியாவில் விளையாடும் முதல் டெஸ்டிலும் அரைசதம் அடித்துள்ளார் (85*). இதன் மூலம் அறிமுகமான வெளிநாடு, உள்நாடு டெஸ்டில் அரைசதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளார். முன்னதாக ருசி மோடி, எஸ். அமர்நாத், அருண் லால், ரெய்னா, ஹர்திக், மயாங்க் அகர்வால் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.’அஷ்வின் நூறாண்டு சாதனை’இங்கிலாந்து 2வது இன்னிங்சின் முதல் பந்திலேயே தொடக்க வீரர் ரோரி பர்ன்சை வெளியேற்றினார் அஷ்வின். ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 2வது ஸ்பின்னர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. 1907ல் நடந்த ஓவல் டெஸ்டில் இங்கிலாந்தின் டாம் ஹேவார்டை இவ்வாறு முதல் பந்திலேயே தென் ஆப்பரிக்காவின் பெர்ட் வோக்லர் ஆவுட்டாக்கினார். அந்த சாதனையை 113 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்வின் சமன் செய்துள்ளார்.’முதலும் முடிவும்’இங்கிலாந்து அணியின் 2 இன்னிங்சிலும் முதல் மற்றும் கடைசி விக்கெட்டை அஷ்வின்தான் கைப்பற்றினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 28வது முறையாகும். இங்கிலாந்துக்கு எதிராக 4வது முறை, சேப்பாக்கத்தில் 3வது முறையாகும். இந்தப் போட்டி இங்கிலாந்து வீரர்கள் ரூட்டுக்கு 100வது, பட்லருக்கு 50வது போட்டி என்பதுடன், இந்தியாவின் அஷ்வினுக்கு 75வது போட்டியாகும்.’இது ஜோசியம்!’விராத் தலைமையிலான இந்திய அணி 150க்கு அதிகமான ரன் எண்ணிக்கையை 11 முறை ‘சேஸ்’ செய்துள்ளது. அவற்றில் 9 போட்டிகளில் இந்தியா தோற்றுள்ளது. மேலும் 2 போட்டிகளில் டிரா செய்துள்ளது. சிட்னியில் ஆஸிக்கு எதிராக 2015ல் நடந்த டெஸ்டில் 349 ரன்னை இலக்காக கொண்டு இந்தியா விளையாடியது. ஆனால் 2வது இன்னிங்சில் 89.5 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 252ரன் எடுத்த போது ஆட்டம் முடிந்ததால் டிரா ஆனது. 2016ல் ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 310 ரன் இலக்கை துரத்தியபோது, 6விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து டிரா செய்தது. இது விராத் அணி ‘சேஸ்’ செய்யும் 12வது போட்டியாகும்.’சதமடித்தால் சக்சஸ்!’கேப்டன் ஜோ ரூட் சதமடித்த டெஸ்டில் இதுவரை இங்கிலாந்து தோற்றதில்லை என்ற சாதனை வரலாறு இருக்கிறது. அவர் கேப்டனாக சதமடித்த 19 டெஸ்டில்… 15 வெற்றி, 4 டிரா கண்டுள்ளார். 100வது டெஸ்ட் முடிவில் 8500 ரன் கடந்தவர்கள் பட்டியலிலும் லாரா (8916 ரன்), சங்கக்கரா (8651, யூனுஸ் கான் (8640), திராவிட் (8553), ஹேடன் (8508) ஆகியோருடன் ரூட் (8507 ரன்) இணைந்துள்ளார்.’இஷாந்த் 300’2வது இன்னிங்சில் 3வது விக்கெட்டாக லாரன்சை வீழ்த்திய இஷாந்த், டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் என்ற மைல் கல்லை எட்டினார். கும்ப்ளே (619விக்கெட்), கபில் (434), ஹர்பஜன் (417), அஷ்வின் (386*), ஜாகீர் (311) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்….

The post இந்தியாவுக்கு 420 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: