இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5% கீழ் குறைந்துள்ளது!: ஒன்றிய அரசு தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இத்தகவலை தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தை விட சராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 29 சதவீதமாக குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
நேற்று ஒரேநாளில் நாடு முழுவதும் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 88 லட்சம் தடுப்பூசிகளில் 63.68 சதவீத தடுப்பூசிகள் கிராமப்புற மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் 17 லட்சம் பேருக்கும், கர்நாடகத்தில் 11 லட்சம் பேருக்கும்  தடுப்பூசி போடப்பட்டது. 
இதேபோல் உத்திரப்பிரதேசத்தில் 7 லட்சம், பீகாரில் 5.7 லட்சம், அரியானா, குஜராத்தில் 5.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று  குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861 ஆக உயர்ந்தது. 
இதேபோல் புதிதாக 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,89,302  ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5% கீழ் குறைந்துள்ளது!: ஒன்றிய அரசு தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: