அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்ட விவகாரம்; ‘எங்களது வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’- சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், ‘எங்கள் வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்’ என சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மனுவை, சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. விருதுநகர் போலீசார் 8 தனிப்படை அமைத்து, தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த வாரம் முன்ஜாமீன் கோரி, ராஜேந்திர பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி ராஜேந்திர பாலாஜி தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”எனது வழக்கை சட்ட ரீதியிலாக சந்தித்து வருகிறேன். இந்நிலையில் காவல் துறையினர், எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், கட்சி நண்பர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். இதுபோன்று செய்ய கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. தற்போது இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உடனடியாக சிறப்பு அமர்வை நியமித்து விசாரிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ராஜேந்திர பாலாஜி, வெளிநாடு தப்பித்து செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. தவிர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பண மோசடி செய்ததாக இன்று மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, நல்லதம்பி என்பவர் சார்பில் வழக்கறிஞர் சோமசுந்தரம், சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டது தொடர்பான வழக்கில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது….

The post அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்ட விவகாரம்; ‘எங்களது வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’- சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: