அதிக வட்டி வசூலித்தால் புகார் அளியுங்கள்

 

திருச்சி. ஜூலை 26:அதிக வட்டி வசூலித்தால் புகார் அளியுங்கள் என்று காவல் துறை சார்பில் பொன்மலை பணிமனை அருகே எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர். திருச்சி பொன்மலை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையம் ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளது. அதில் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றக்கூடிய ஒன்றிய அரசு ஊழியர்கள் தங்களின் தேவைக்காக வட்டிக்கு வெளியே உள்ள தனி நபர்களிடம் பணம் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மாத சம்பளத்தை நம்பி வட்டிக்கு பணம் கொடுக்கும் கும்பல் ஊழியர்களை குறிவைத்து மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி, தண்டல், மணி நேர வட்டி என பணத்தை கொடுத்துவிட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க தொடர்ந்து அவர்களை மிரட்டுவது, அடிப்பது, சொத்துக்களை எழுதி வாங்குவது, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்த கும்பல் கொடுக்கும் மன உளைச்சளால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது.

எனவே இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழியர்களை இதுபோன்ற கும்பல்களிடம் இருந்து காப்பாற்றவும், திருச்சி பொன்மலை பணிமனையில் பணியாற்றும் ஊழியர்களும் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாவதால், அதிக வட்டி வசூல் செய்யும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்று பொன்மலை பணிமனை என்ற ஒரு அறிவிப்பு பலகை பொன்மலை காவல் நிலையம் சார்பில் வைத்துள்ளனர். இது ஊழியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கந்து வட்டிக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இந்த அறிவிப்பு பலகை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

The post அதிக வட்டி வசூலித்தால் புகார் அளியுங்கள் appeared first on Dinakaran.

Related Stories: