சாயல்குடி பகுதியில் பலத்த மழை : அரசு உப்பளம் பாதிப்பு

சாயல்குடி: சாயல்குடி பகுதியில் பெய்த மழைக்கு வாலிநோக்கம் அரசு உப்பளத்தில் உப்புகள் நனைந்து நாசமாயின. இதனால் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் மாரியூர்வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. மாரியூர் மற்றும் வாலிநோக்கம் கடற்கரையிலிருந்து கடல்நீர் பாய்ச்சப்பட்டு,  நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாகும் உப்பை, இங்குள்ள அரசு தொழிற்சாலையில் நவீனமுறையில் இயற்கையான அயோடின் கலந்து உப்பு தயாரிக்கப்படுகிறது, அரசு பயன்பாட்டிற்கு போக மீதவற்றை வெளிச்சந்தை மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்று லாபத்துடன் இயங்கி வருகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமா இருப்பதால், அதிகளவில் உப்பு விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக வாலிநோக்கம் பகுதியில் மழை பெய்தது, அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், மழைகால பாதுகாப்பு பொருட்கள் (தார்பாய், கிடுகு கீற்றுகள்) இருந்தும் அவற்றை கொண்டு உப்புகளை முறையாக மூடிவைக்காததால், உப்பளத்தில் விளைந்த உப்புகள், கரையில் சேமித்து வைக்கப்பட்ட உப்புகள் மழைக்கு நனைந்து கரைந்து ஓடின. உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாத்தியில் பெருகிய மழைத்தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால், உப்பு பாதி விளைந்த நிலையில், மழைத்தண்ணீர் கலந்து வீணாகி வருகிறது. இதனால் அரசிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலைக்கு தேவையான உப்புகளின் இருப்பு குறைந்தால், தயாரிப்புக்கு தேவையான உப்புகள் இன்றி தொழிற்சாலை இயங்காமல், நிற்கும் அபாயம் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன், அரசுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.70 லட்சம் வருவாய் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மழையால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி: முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியிலுள்ள தரைக்குடி, டி.எம். கோட்டை, இதம்பாடல், சிக்கல், தேரிருவேலி, கீழத்துவல், மகிண்டி, தாழியரேந்தல், கொடுமலூர், சவேரியார்பட்டிணம், சமுத்திரம், புளியங்குடி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் போர்வெல் துணையுடன் பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழைக்கு வயல்காடுகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: