பெயரால் பிரச்னையில் சிக்கிய மாளவிகா

‘ஜோ’, ‘ஆண் பாவம் பொல்லாதது’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான மலையாள நடிகை மாளவிகா மனோஜ், மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுதான் மாளவிகா மனோஜ் நடித்த முதல் தமிழ் படம். ஆனால், திரைக்கு வருவது தாமதமாகிவிட்டது. மாளவிகா மனோஜ் கூறுகையில், ‘நான் நடித்த ‘ஹபீபி’ படத்தை பார்த்த தமிழ் படவுலகின் முக்கியமான இயக்குனர்கள், எனது நடிப்பை வெகுவாக பாராட்டினர்.

ஆனால், இன்னும் நான் படத்தை பார்க்கவில்லை. தமிழில் நான் முதன்முதலில் ஒப்பந்தமான படம் இதுதான். அப்போது 10ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். எனது கேரக்டருக்காக மிகவும் கடினமாக உழைத்தேன். கிராமத்தில் படப்பிடிப்பு நடந்ததால் கேரவன் வசதி கிடைக்கவில்லை. ‘ஜோ’ படத்துக்கு பிறகுதான் எனது வெற்றிகரமான திரைப்பயணம் தொடங்கியது. மலையாளத்தில் நான் நடித்திருந்த முதல் படத்தில் எனது ஸ்கிரீன் ஸ்பேஸ் நன்றாக இருக்காது. எனது பெயர் குறித்து பல குழப்பங்கள் இருக்கிறது.

எனது பிரெண்ட்ஸ் மற்றும் உறவினர்களுக்கு நான் எப்போதுமே மாளவிகாதான். சில இடங்களில் பெயரை மாற்றி புரிந்துகொள்வார்கள். ஒருமுறை மாளவிகா மோகனன் என்று நினைத்து, எனது தந்தைக்கு போன் செய்து பேசியிருக்கின்றனர்’ என்றார்.

Related Stories: