சென்னை: சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குனரும், மூத்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரியா செல்வராஜ், மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி ஆவார். 52 வயதான அவர் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த மே 25ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தார். ஏற்கனவே 8,163 மீ உயரம் கொண்ட மனாஸ்லு என்ற சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார்.
இதன்மூலம், 7 மாதங்களுக்குள்ளாக 8,000 மீட்டர் உயரம் கொண்ட 2 சிகரங்களில் ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்த பிரியா செல்வராஜ் கூறியதாவது: எவரெஸ்ட்டை அடைவது இலக்காக இருந்தாலும், உண்மையான மன உறுதி, ஆன்மீக வளர்ச்சியை முன்வைத்து இப்பயணத்தை மேற்கொண்டேன். இது அதிக சவால்கள் நிறைந்ததாக இருந்தது. தீவிர பயிற்சி, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு காரணமாகவே இது சாத்தியமனது.
மலை ஏறும் சாதனையை தாண்டி வயது அல்லது சூழ்நிலையை பொருட்படுத்தாமல் லட்சிய இலக்குகளை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தேன். அதற்கு எனது பயிற்சியாளரும் உறுதுணையாக இருந்தார். எவரெஸ்ட் சிகரம் அதன் பிரமாண்டத்துக்கு ஏற்றவாறு மன உறுதி, வலிமை ஆகிய அனைத்தையும் முழுமையாக சோதித்தது. எனினும், அந்த இலக்கை அடையும்போது மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. எந்தவொரு சாதனையையும் செய்வதற்கு வயது முக்கியம் இல்லை. மன உறுதியும், உடல்நலமும்தான் மிகவும் முக்கியம்.
