பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாரத்தில், 65 சதவீத அரசு பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பேருந்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது 40க்கும் அதிகமான மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 49 புதிய மினிபேருந்துகள் இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதில், விதிமுறைகளை மீறி, ஏற்கனவே மினி பேருந்து இயக்கப்பட்டு வரும் வழித்தடங்களில், புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜூவின் உறவினருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்ததால், இரவோடு இரவாக 33 புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மினிபேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பரமக்குடி பேருந்து நிலையத்தில் அமைச்சரின் உறவினரது பேருந்துகளை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பரமக்குடி மினி பஸ் உரிமையாளர் முரளி கூறுகையில், ‘‘அமைச்சர் ராஜீவ், மாவட்ட கலெக்டரிடம் தனது உறவினருக்கு அதிகமான அனுமதி வழங்க வேண்டும் என கூறியதால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆர்டிஓவிடம் கூறி அதிகமான புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் மினி பேருந்துகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது’’ என்றார். இதன் தொடர்ச்சியாக பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
