திருச்சி: காவிரி ஆற்றில் தண்ணீரின்றி வறண்டதால் நேற்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. ஷவர்கள், குழாய்களில் வந்த தண்ணீரில் மங்கல பொருட்களை படையிலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர். தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஓகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா நேற்று காவிரி பாயும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்பட டெல்டா மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. விழாவுக்காக மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் திருச்சி அகண்ட காவிரி, கொள்ளிடம், கிளை ஆறுகள் உட்பட நீர்நிலைகள் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. இதனால் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்தது.
திருச்சி ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 20 என 40 ஷவர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஷவர்களில், தொட்டிகளில் புனித நீராடி புத்தாடைகள் அணிந்தனர். பின்னர் படித்துறையில் வாழை இலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழங்கள் மற்றும் மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மணலிலும், மைய பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரிலும் விட்டனர். மேலும் காவிரி அன்னைக்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர். புதுமண தம்பதிகள் அணிந்த மாலைகளை ஓடை போல் ஓடிய நீரில் விட்டதுடன் சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர்.
இதேபோல திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை பெட்டவாய்த்தலை, திருப்பராயத்துறை, தொட்டியம், ராமசமுத்திரம், முசிறி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. வறண்ட காவிரியில் பக்தர்கள் நீராட வசதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி கரையில் கட்டப்பட்டுள்ள புஷ்கர தொட்டியில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதில் பக்தர்கள் புனித நீராடி காவிரி தாயை வணங்கினர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் புதிய கடற்கரை. வேளாங்கண்ணி கடற்கரை, கீழ்வேளூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மக்கள், புதுமண தம்பதிகள் அதிகளவில் வழிபாடு நடத்தினர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான கமலாலய தெப்பக்குளத்தில் நேற்று அதிகாலை முதலே மக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். இதேபோல் புதுமண தம்பதிகளும் வந்து ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தினர். ஓடம்போக்கி ஆறு, வெட்டாறு மற்றும் முத்துப்பேட்டை கடற்கரை, மன்னார்குடி திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் நீர்நிலைகளில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தினர். கரூர் அடுத்த நெரூர் காவிரி ஆற்றில் மக்கள் அதிகளவில் திரண்டு படையலிட்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மணமேல்குடியில் உள்ள கடற்கரையில் அதிகளவில் குவிந்தனர். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைகளில் மக்கள் திரண்டு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
இதேபோல், பூலாம்பட்டி, தேவூர் பகுதியில் காவிரியாற்றில் புனித நீராட 10 இடங்களில் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், காவிரியில் நீர் இல்லாததால் மக்கள் மிக குறைந்த அளவே வந்தனர். ஆங்காங்கே தேங்கி நின்ற தண்ணீரில் புனித நீராடினர். பூலாம்பட்டியில் சில இடங்களில் புதுமணத்தம்பதியினர் புது தாலிக்கயிறு கோர்த்துக் கொண்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள். ஆனால், நடப்பாண்டு காவிரியில் இன்னும் அதிகளவு தண்ணீர் வராததால், அங்கும் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
* ஒகேனக்கல், மேட்டூரிலும் மக்கள் வருகை குறைந்தது
சேலம் மாவட்டத்தில், மேட்டூர் காவிரியில் ஆடிப்பெருக்கு புனித நீராடுவதற்கு சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். ஆனால் நேற்று, மேட்டூர் காவிரியில் தண்ணீர் இல்லாததால், மக்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. காவேரி பாலம் படித்துறை, அணைக்கட்டு முனியப்பன் கோயில் பகுதியில் உள்ள படித்துறையில் அதிகளவு தண்ணீர் இல்லாததால், நீர்வளத்துறை அதிகாரிகள் புதர்களை கூட அகற்றவில்லை. இதனால் குளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
