5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு: வரும் 24ம் தேதி விசாரணை

 

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல் வழக்குக்கான மனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், இடைத்தேர்தல் நடத்த அனுமதித்தால் எந்த ஒரு சிக்கலான சூழலும் எழ வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.விஜயபாஸ்கர் தனது மனுவில், தொகுதியில் 80 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் தனது தேர்தல் செல்லாது என்று யூகித்துக் கொண்டாலும் கூட தவெக வேட்பாளர் மதியழகானோ, வேறு எந்த வேட்பாளராக இருந்தாலும் கரூர் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பில்லை. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்துக்காக மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார். இந்த மனுக்கள் ஆகஸ்ட் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories: