திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2 நாளுக்கு பிறகு செந்தில்பாலாஜி ஆஜர்

 

சென்னை: இரண்டு நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜரானார்.தவெக அரசுக்கு எதிராக செயல்பட தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அவரது சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பட்டது. எனினும், அவர் ஆஜராகவில்லை.

இதுதொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து, உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும், அவரது சகோதரர் அசோக்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். ஆனால் கடந்த 2 தினங்களாக ஆஜராகவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் பார் டெண்டர், மதுபான கொள்முதல், வாகன டெண்டர், காலி பாட்டில்கள் சேகரிப்பு ஆகியவற்றில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி. விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் 6 நாட்களுக்கு மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார்.இந்தச் சூழலில், நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்த செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

அதற்கு பின் நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, மக்கள் பணிகளில் கவனம் செலுத்தாமல் வழக்குகளை போடுவதில் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி அத்தனை வழக்குகளும் பொய்யானவை என்று நிரூபித்து காட்டுவோம். குதிரை பேர வழக்கில் கைதானவர் பெயர் எப்ஐஆரில் இல்லை என்று கூறினார்.

Related Stories: