சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் உள்பட 630 போலீசாருக்கு பதக்கம்; 19 ஐபிஎஸ் அதிகாரிகளை புறக்கணித்த முதல்வர் விஜய்: 76 அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் : கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு 42 மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம், 96 இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது

 

சென்னை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணியை சிறப்பித்து கவுரவிக்கும் வகையில் குடியரசு தலைவர் பதக்கம், ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம், முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு 630 பேருக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல்வர் விஜய் ராஜரத்தினம் மைதானம் வந்த போது, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் விஜய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறையின் பேண்டு வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து குதிரைப்படை, தீயணைப்புதுறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு சிங்கப்பெண் சிறப்பு படை, சிறைத்துறை, கமாண்டோ படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். பிறகு அகாஷ் ஜோசி ஐபிஎஸ் தலைமையில் நடந்த அலங்கார அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் முதல்வர் விஜய் குடியரசு தலைவர் பதக்கம், ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம், தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். குறிப்பாக ரயில்வே டிஜிபியாக உள்ள வன்னியபெருமாள், சைபர் க்ரைம் டிஜிபி பாலநாகதேவி, சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, கோவை கமிஷனர் கண்ணன், ஐஜிக்கள் கார்த்திகேயன், துரைகுமார், மகேஸ்வரி, லலிதா லட்சுமி, குமாரவேல், லோகநாதன், ஏ.ஜி.பாபு, பிரவின்குமார் அபிநாபு, நரேந்திர நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தடயவில் துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள் என மொத்தம் 76 பேருக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

அதில் டிஐஜிக்கள் அருளரசு, வருண்குமார், வந்திதா பாண்டே, ஜெயலட்சுமி மற்றும் பாலாஜி சரவணன், பிரபாகர், மீனா உள்ளிட்ட 15 எஸ்பிக்களுக்கு முதல்வர் விஜய் பதக்கம் வழங்கவில்லை. அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் இருந்து கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோரது காலம் வரை எஸ்பிக்கள் முதல் டிஜிபிக்கள் வரை உள்ளவர்களுக்கு முதல்வராக இருப்பவர்கள்தான் பதக்கங்களை வழங்குவார்கள். எஸ்பிக்கு கீழ் உள்ளவர்களுக்கு டிஜிபிக்கள், ஏடிஜிபிக்களாக உள்ளவர்கள் பதக்கம் வழங்குவார்கள். ஏனெனில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு முதல்வர் மட்டுமே பதக்கம் வழங்கினால் தாமதமம் ஆகும் என்பதால் இந்த ஏற்பாடுகளை செய்வார்கள். ஆனால் எஸ்பிக்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் கையால் வழங்குவதுதான் மரபாக இருந்து வந்தது.

ஆனால் நேற்று 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது வழங்கவில்லை. அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான போலீசாருடன் மேடைக்கு கீழே நிற்க வைக்கப்பட்டு விருதுகளை உயர் அதிகாரிகள் மூலம் வழங்கினர். இந்த சம்பவம் போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த அரசு வந்தாலும் அதிகாரிகளை, அரசியல் கட்சிகளின் சார்பாக பார்க்க மாட்டார்கள். உளவுத்துறை உள்ளிட்ட ஒரு சில பதவிகளில் இருந்தவர்களை மட்டும் சில மாதங்கள் மட்டுமே டம்மி பதவியில் வைத்திருப்பார்கள்.

பின்னர் அவர்களுக்கும் நல்ல பதவி வழங்கப்படும். அதேபோலத்தான் அதிமுகவில் செல்வாக்காக இருந்த அதிகாரிகளுக்கு உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் முதல் முறையாக விஜய் ஆட்சியில்தான் இந்த பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளது. நேர்மை மற்றும் திறமையானவர்களுக்குத்தான் பதக்கமே வழங்கப்படுகிறது. அப்படி பதக்கம் வாங்குபவர்களை கூட முதல்வரிடம் இருந்து பிரித்தது சில அதிகாரிகள் செய்த சூழ்ச்சி என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. தங்களுடைய இருப்பிடத்தை தக்க வைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் மோப்ப நாய் ராக்கி, மேடைக்கு அழைக்கப்பட்டு, முதல்வருக்கு பொக்கே வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஒரு மோப்ப நாய்க்கு வழங்கும் மரியாதை கூட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் வழங்கவில்லை என்ற மனவருத்தம் தற்போது போலீஸ் உயர் அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. மேலும், திட்டமிட்டு தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவினர் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர பகுதிகளில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் புதிதாக 42 மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம், 96 இருசக்கர வாகனங்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்பட்டது.

பிறகு புதிய நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களை முதல்வர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் தமிழ்நாடு மோப்ப நாய் பிரிவு சாகசம் நடந்தது. அதன் பிறகு மோப்ப நாய்கள் தீயில் பாய்ந்து செல்லும் சாகசம் நடந்தது. அதனை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் அதிதீவிர படையின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதில் அரசு சுகாதார நிலையத்தில் தீவிரவாதிகள் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளை பிணைய கைதிகளாக பிடித்து சிறை வைத்தனர். அப்போது அதிதீவிரப்படை வீரர்கள் மோப்ப நாய் ராக்கி உதவியுடன் தீவிரவாதிகளை பிடித்து டாக்டர் மற்றும் நோயாளியை மீட்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

மேலும், சென்னை ஆயுதப்படையின் காவத் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆயுதப்படை வீரர்கள் துப்பாக்கிகளை சர்வ சாதாரணமாக சுழற்றி நட்சத்திரம் போன்று சாகசம் செய்தனர். இதேபோல், தமிழ்நாடு காவல்துறையின் பைக் சாகச நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையில் நடந்த பைக் சாகசத்தில் ஏணியில் நடந்து செல்வது போல், பைக் ஓட்டும் போது நாளிதழ் படிப்பது போன்று, பிரமிடு போன்று பல்வேறு சாகச நிகழ்ச்சி நடத்தினர். இது பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

சாகச நிகழ்ச்சியை தொடர்ந்து பதக்கம் பெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் முதல்வர் விஜய் குழு படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சி நிறைவில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் முதல்வர் விஜய்க்கு நினைவு பரிசு வரங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை செயலாளர் சாய் குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Related Stories: