சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், மறுபுறம் கடலூர் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் போன்ற ரசாயனங்களை கலந்து கலப்படம் செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய ரசாயன கலப்படங்களை அனுமதிப்பதும், முறைகேடுகளை தட்டிக்கேட்பவர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் தற்போதைய தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் படம்பிடித்து காட்டுகிறது.
பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவு கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
