மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல் வைக்கவும் அரசு அனுமதிக்காது: சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்

 

கோவை: மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல்லை கூட வைக்க அரசு அனுமதிக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடகா அரசு தேதி அறிவித்து இருக்கும் நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:  மேகதாது அணையை பொறுத்தவரை, ஒரு செங்கல்லை கூட வைக்க தமிழக அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். பிரதமரை சந்திக்கும் போதும் சரி, சட்டசபையாக இருந்தாலும் சரி தெளிவாக சொல்லி இருக்கிறார். இந்த விவகாரத்தில் சரியான நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயமாக மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம் கட்சியினர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘ஒரு இயக்கம் எது வேண்டுமானாலும் செய்யலாம். புதிய தமிழகத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும். ஒவ்வொரு இயக்கமும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பொதுமக்களின் பிரச்னைக்காக நடைபெறும் அந்த கூட்டத்தில் யார்?, யார்? பங்கேற்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியும்’’ என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Related Stories: