அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 ஆயிரம் டன் காய்கறிகள் வந்தது. இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக 7 ஆயிரம் டன் மட்டுமே காய்கறிகள் வருவதால் அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலைகள் மிக கடுமையாக உயர்ந்து உள்ளது. இதன்படி, ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஊட்டி கேரட் தற்போது 120 ரூபாய்க்கும் பீன்ஸ் 60 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும் 100 ரூபாயில் இருந்து இஞ்சி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், பூண்டு 130 ரூபாயில் இருந்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை மிளகாய் ரூ.70, கத்திரிக்காய் ரூ.50, பீட்ரூட் ரூ.40க்கு விற்பனையாகிறது. வெங்காயம் ரூ.40, தக்காளி ரகம் வாரியாக 12 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
‘’கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து 3 ஆயிரம் டன் வரை குறைந்துள்ளது. குறிப்பாக கேரட், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி ஆகியவற்றின் வரத்து பெருமளவு சரிந்துள்ளதால் அதன் விலை மிகவும் உயர்ந்து உள்ளது. அனைத்து காய்கறிகளின் விலை ஒரு கிலோவிற்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்து உள்ளது. இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ‘’காய்கறிகள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பெண்கள் கூறுகின்றனர்.
