நெல்லை, ஜூலை 27: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 53 தொகுப்பூதியப் பணியாளர்கள் பணிநிரந்தரம் வேண்டி 24 ஆண்டுகாலமாக போராடி வருகின்றனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தற்காலிக அலுவலகப் பணியாளர்களாக (அன்ஸ்கில்டு என்எம்ஆர்) 53 பணியாளர்கள் பணிக்கு சேர்ந்தனர். தற்போது வரை 24 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் 53 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் தொகுப்பூதியமும், அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணிநிரந்தரமும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசாணை விதிகளாகும். இந்த விதியின் கீழ் பல ஊழியர்கள் ஏற்கனவே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு மட்டும் கடந்த 24 ஆண்டுகளாக அரசாணை விதிகள் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
அங்கு பணியாற்றும் இத்தகைய பணியாளர்கள் தங்களது வாழ்நாளின் பாதியை (17 முதல் 25 ஆண்டுகள் வரை) நெல்லை பல்கலைக்கழகத்திற்காகவே செலவிட்டுள்ளனர். தற்போது இவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்த நிலையில், தங்களின் எதிர்காலமும், தங்களது குழந்தைகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பலமுறை மனு அளித்தும், உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கருணை அடிப்படையிலும், பல்கலைக்கழக விதிகளின்படி தங்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்பி வருகின்றனர்.
டேட்டா ஆபரேட்டர்களுக்கு பதவி உயர்வில்லை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஆய்வு உதவியாளர்கள் ஆகியோர் பல்கலைக்கழக மானியக்குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று வரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கிரேடு 1, கிரேடு 2 என்கிற அந்தஸ்து கூட கிடைக்காமல் பல ஆண்டுகளாக திண்டாடி வருகின்றனர். எனவே உயர்கல்வித்துறை அதிகாரிகள் பல்கலைக்கழக பணியிடங்களில் பதவி உயர்வுக்கும் உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டு கொண்டுள்ளனர்.
டேட்டா ஆபரேட்டர்களுக்கு பதவி உயர்வில்லை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஆய்வு உதவியாளர்கள் ஆகியோர் பல்கலைக் கழக மானியக்குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று வரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கிரேடு 1, கிரேடு 2 என்கிற அந்தஸ்து கூட கிடைக்காமல் பல ஆண்டுகளாக திண்டாடி வருகின்றனர். எனவே உயர்கல்வித்துறை அதிகாரிகள் பல்கலைக்கழக பணியிடங்களில் பதவி உயர்வுக்கும் உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டு கொண்டுள்ளனர்.
