திருவாரூர், ஜுலை 27: திருவாரூர் மாவட்டத்தில் குறுவை காப்பீடு தொடர்பாக நாளை மற்றும் வரும் 30ந் தேதி வி.ஏ,ஓ அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமினை விவசாயிகள் பயன்படுத்திகொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் வரும் 31ந் தேதி-க்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தங்கள் நெற்பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம். வறட்சி, புயல், அதிக மழை போன்ற எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் இழப்புகளை ஈடுசெய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீடுத்திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நடப்பு குறுவை பருவ நெல்லுக்கு பிரிமியமாக திருவாரூர்- 1 மாவட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.513.48 மற்றும் திருவாரூர்- 2 மாவட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.618.51 செலுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள் இ-சேவை மையங்கள் அல்லது தேசிய பயிர்காப்பீட்டு இணையதளத்தில் உள்ள ‘விவசாயிகள் கார்னரில்’ (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பயிர் காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பெயர், வருவாய் கிராமத்தின் பெயர், புலஎண், பரப்பு, வங்கி கணக்கு எண் முதலான விவரங்களை ரசீது சீட்டில் சரிபார்த்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கான சிறப்பு முகாமனது நாளை (28ந் தேதி) மற்றும் வரும் 30ந் தேதி அந்தந்த வி.ஏ,ஓ அலுவலகங்களில் நடைபெறவுள்ளதால் இதனை விவசாயிகள் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
