புழல்: கஞ்சா விற்பனை, மாமூல் தகராறில் புழல்சிறையில் இருந்து ஜாமீனில் வந்த ரவுடியை காரில் கடத்தி தாக்கிய 2 பெண் உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தீவுத்திடல் அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). பட்டாபிராம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டும் தொழில் செய்து வருகிறார். மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையும் செய்துவந்துள்ளார். போதை பொருள் விற்றது தொடர்பாக அண்மையில் அண்ணா சதுக்கம் போலீசாரால் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுபோல் திரு வல்லிக்கேணியை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளி சகோதரர்கள் பாலாஜி, வினோத் ஆகியோரும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தனர்.
இதனிடையே, சதீஷ்குமாருக்கும், பாலாஜி, வினோத் ஆகியோர் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறு இருந்துள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையும், மாமூல் வசூலிப்பதிலும் தகராறு இருந்துவந்துள்ளது. புழல் சிறையிலும் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிறையிலிருந்து பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சதீஷ்குமார், வினோத் ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து வீட்டுக்கு செல்வதற்காக பாலாஜி தரப்பினர் சிறை வாசலில் காத்திருந்தனர்.
அப்போது சிறையில் இருந்து வெளியில் வந்த சதீஷ்குமாரை திடீரென கத்திமுனையில் காரில் கடத்திய பாலாஜி தரப்பினர், சதீஷ்குமாரை சரமாரி தாக்கியுள்ளனர். செங்குன்றம் அருகே கார் வந்தபோது 4 பேரும் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கியுள்ளனர். அந்த நேரத்தில் காரில் இருந்து குதித்து தப்பிய சதீஷ்குமார், புழல் பகுதிக்கு வந்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ஆய்வாளர் வசந்த்ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தபோது குற்றவாளிகள் மாமல்ல புரத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தனிப்படை போலீசார், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த உறவினர்கள் பாலாஜி (33), வினோத் (55), தேன்மொழி (55), மோகனா (35) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.
பின்னர், புழல் காவல்நிலையம் கொண்டு வந்து நடத்திய விசாரணையில், மெரினா கடற்கரையில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்பகை மற்றும் மாமூல் வசூல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து 4 பேரையும் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கைதியை காரில் கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
