*குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
*நீரியல் நிபுணர்கள் எச்சரிக்கை
கூடலூர் : கூடலூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததால், விவசாயத் துறையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம் கூடலூர் பகுதி இருவேறு விவசாய அமைப்புகளைக் கொண்டுள்ளது. பெரியாறு அணை நீரை நம்பிய பாசன நிலங்களில் சுமார் 11,807 ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட சாகுபடி நடைபெறுகிறது.
இதனுடன் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு பாசனத்தின் மூலம் வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட பணப்பயிர்களும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. அதே நேரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வானம் பார்த்த மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே நம்பி மொச்சை, கம்பு, சோளம், தட்டைப்பயறு, எள், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த மானாவாரி சாகுபடி இருந்து வருகிறது.
நிலத்தடி நீர் வேகமாக சரிவு:
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விதைக்கப்பட்ட மொச்சை உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் போதிய மழை கிடைக்காததால் முளைப்பிலேயே பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் முளைத்த பயிர்கள் ஈரப்பதம் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன. மேலும் பல விவசாயிகள் விதைப்பு பணிகளையே தள்ளிப்போட்டுள்ளனர்.
தொடர்ச்சியான மழையின்மையால் நிலத்தடி நீர்மட்டம் உயராததால், பல ஆண்டுகளாக வற்றாத கிணறுகளிலும் தற்போது நீர் குறைந்துள்ளது. முன்பு சில மணி நேரம் மோட்டார் இயக்கினால் போதுமான தண்ணீர் கிடைத்த நிலையில், தற்போது நீண்ட நேரம் இயக்கியும் போதிய நீர் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் பல அடி குறைந்துள்ளதால் கூடுதல் திறன் கொண்ட மின்மோட்டார்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார செலவும், பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
தோட்டக்கலை சாகுபடிகளும் நெருக்கடி:
கூடலூர் சுற்றுவட்டாரத்தில் வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு தொடர்ந்து நீர் வழங்க வேண்டிய அவசியம் உள்ளதால், தற்போதைய தண்ணீர் பற்றாக்குறை மகசூலை நேரடியாக பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
வாழைத் தோட்டங்களில் இலைகள் சுருங்குதல், குலை வளர்ச்சி குறைதல், தென்னை மரங்களில் காய் உதிர்வு, திராட்சைத் தோட்டங்களில் கொடி வளர்ச்சி பாதிப்பு போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
நெல் சாகுபடிக்கும் சவால்:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பெருமளவில், பெரியாறு அணை நீரை சார்ந்துள்ளது. ஆனால் அணையில் தற்போது போதிய நீர் இருப்பு இல்லாததால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் கூடலூர் பகுதியிலும் எதிரொலித்துள்ளது. பெரியாறு பாசனத்தைத் தவிர, உள்ளூர் நீர்நிலைகளை நம்பியுள்ள பகுதிகளிலும் பாசன வசதி பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்தடுத்த சாகுபடிகள் குறித்த கவலை அதிகரித்துள்ளது.
வற்றிய நிலையில் ஒட்டான்குளம்:
கூடலூர் நகராட்சி 13வது வார்டில் அமைந்துள்ள ஒட்டான்குளம் (மைத்தலை மன்னாடிகுளம்), கூடலூர் பகுதியின் முக்கிய பாசன நீராதாரங்களில் ஒன்றாகும். இந்தக் குளத்தின் மூலம் சுமார் 5,00 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் கால்நடைகளுக்கான குடிநீர், சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முக்கிய ஆதாரமாகவும் இந்தக் குளம் விளங்குகிறது. மழைக்காலங்களில் சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரும், முல்லைப் பெரியாற்றிலிருந்து வைரவன் வாய்க்கால் வழியாக கூட்டாறு மூலம் வரும் நீரும் ஒட்டான்குளத்தில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 9.110 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்தக் குளம் வழக்கமாக ஆண்டு முழுவதும் நீர் நிரம்பிய நிலையில் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழையின்மையாலும், பெரியாற்றிலிருந்து தேவையான அளவில் நீர் வரத்து இல்லாததாலும், ஒட்டான்குளத்தில் போதிய அளவு நீர் தேங்கவில்லை.
இதன் விளைவாக இந்தக் குளத்தை நம்பியுள்ள 500 ஏக்கர் நெல் சாகுபடியும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் அடுத்த போக சாகுபடியும் கேள்விக்குறியாகும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை வறட்சி பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும். பயிர் கடன்களை மறுசீரமைத்து வட்டி தள்ளுபடி அறிவிக்க வேண்டும். விவசாய மின் விநியோக நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும் கூடுதல் மானியம் வழங்க வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களுக்கு தனி நிவாரணத் திட்டம் அறிவிக்க வேண்டும். விதை, உரம், நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும்.
கால்நடைகளுக்கான தீவன வங்கிகளை அமைக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை அவசர அடிப்படையில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் மற்றும் நீரியல் நிபுணர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக பருவமழையின் காலம் மற்றும் மழைப்பொழிவு மாறுபட்டு வருவது விவசாயத்தை பெரிதும் பாதிக்கிறது. ஒரே நேரத்தில் அதிக மழை பெய்து பின்னர் நீண்ட இடைவெளி வறட்சி நிலவுவது போன்ற மாற்றங்கள் மண் ஈரப்பதத்தை குறைத்து, நிலத்தடி நீர் நிரம்பும் வாய்ப்பையும் சுருக்குகின்றன.
எதிர்காலம் கவலைக்கிடம்
தென்மேற்கு பருவமழை விரைவில் தீவிரமடையாவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிவதுடன், குடிநீர் விநியோகம், விவசாய உற்பத்தி, கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் ஆகிய அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், நீண்டகால நீர்வள மேலாண்மை, மழைநீர் சேமிப்பு, நவீன பாசன முறைகள், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப வேளாண் திட்டமிடல் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
நிபுணர்கள் பரிந்துரைக்கும் தீர்வுகள்
ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஓடைகளை முழுமையாக தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். சொட்டு மற்றும் தெளிப்பு பாசனத்திற்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும். குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் பயிர்களை ஊக்குவிக்க வேண்டும்.வறட்சியைத் தாங்கக்கூடிய விதை ரகங்களை வேளாண்மைத் துறை மூலம் வழங்க வேண்டும்.
பண்ணைக் குட்டைகள், பண்ணை குளங்கள் அமைப்பதற்கு அதிக நிதியுதவி வழங்க வேண்டும். நிலத்தடி நீர் நிரப்பும் செயற்கை ரீசார்ஜ் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கு காலநிலை முன்னறிவிப்பு மற்றும் பயிர் ஆலோசனைகளை உடனுக்குடன் வழங்கும் முறையை வலுப்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டங்களில் பதிவு செய்வதை எளிமைப்படுத்தி, பாதிப்பு ஏற்பட்டால் விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
