கல்வி அமைச்சரை பதவி விலக்கக் கோரி போராட்டம் நடக்கும் நிலையில் ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் தூக்கியடிப்பு: உண்ணாவிரதத்தை திடீரென முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்

 

* அழுத்தத்திற்கு பணிந்து வீடியோ வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு பிரச்னை எதிரொலியாக ஒன்றிய கல்வித்துறையில் பெரிய அளவிலான அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் சிறப்பு நீதிமன்ற மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு எதிராக ஒன்றிய ்்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற மாணவர் அமைப்பினர் நடத்திய தீவிர போராட்டம், இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு மற்றும் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக, ஒன்றிய கல்வி அமைச்சகத்தில் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஆகிய இரு பொறுப்புகளை வகித்து வந்த 1992ம் ஆண்டு மணிப்பூர் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் வினீத் ஜோஷி அதிரடியாக மாற்றப்பட்டு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய தேர்வு முகமையின் முதல் பொது இயக்குநராகவும், சிபிஎஸ்இ தலைவராகவும் பணியாற்றிய இவர், மாணவர்களின் பிரச்னைகளை அலட்சியப்படுத்தியதால் தண்டனை நடவடிக்கையாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.
வினீத் ஜோஷிக்கு பதிலாக, தொழில்நுட்ப பின்னணி கொண்ட 1994ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் பால் கங்வார் புதிய உயர்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.டெக் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், இதற்கு முன்பு கால்நடை மற்றும் பால்வளத்துறை செயலாளராகவும், சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இணை செயலாளராகவும், 2014ம் ஆண்டு ராஜஸ்தான் பள்ளி கல்வித் துறை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். இவருடன் சேர்த்து, பள்ளி கல்வித் துறை செயலாளராக டி.கே.அனில் குமாரும், ஒடிசா பிரிவைச் சேர்ந்த 1995ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி சுஷில் குமார் லோஹானி, புதிய கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டு நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 26 நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், தற்போது குருகிராம் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு மத்தியில், சோனம் வாங்சுக்கை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேற்றிரவு சந்தித்தனர். அவர்கள் அளித்த வாக்குறுதியை ஏற்று தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் முடித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பின், மேலும் வன்முறை வெடிப்பதை தடுக்கவே எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது சோனம் வாங்சுக் 11 கிலோ உடல் எடையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதாக அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி அளித்துள்ளார். மேலும், நீட் வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும், வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு எதிராக விரைவான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தர டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையே நேற்றிரவு பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், ‘வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல; லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இது மிகவும் வேதனை அளிக்கிறது; கடந்த இரண்டரை மாதங்களில் குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; மாணவர்களின் ஒரு வருட காலம் வீணாகக் கூடாது என்பதற்காக, குறுகிய காலத்தில் 22 லட்சம் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த 19ம் தேதி முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன; இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; விரைவில் சிறப்பு நீதிமன்ற மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: