டெல்லி: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் பதிவேற்றம் செய்யும் நீட் வரிசை எண், மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
நேற்று மாலை 5 மணி அளவில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 70,485 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29,725 விண்ணப்பங்களும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
கடந்த 2025-ஆம் ஆண்டு இளநிலை எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கு 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியின் பேரில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இறுதி செய்யப்படவுள்ளன. மாணவர் சேர்க்கை, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெறப்பட்ட 70,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படி சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில், போலியான விண்ணப்பங்களோ அல்லது தவறான சான்றிதழ்களோ பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த விண்ணப்பங்களை நீக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதோடு, விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களின் நீட் (NEET) மதிப்பெண் விவரங்களைத் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெற்ற பிறகு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
