சென்னை: மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி, நீட் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியார் நாளிதழ் தலையங்கத்தில் எழுதியது: நீட் வினாத்தாள் கசிவை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், வெறும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல. தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே அவை வெளிப்படுத்துகின்றன.
நீட்டுக்கு எதிராக முதன்முதலில் எச்சரிக்கை குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான். நீட்டை அறிமுகப்படுத்தியபோது, ஒன்றிய அரசு மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமையை அது குறைக்கும்; மருத்துவச் சேர்க்கைகளில் நிலவி வந்த கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கலை அது முற்றிலும் ஒழிக்கும்; மிக தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதை உறுதிசெய்யப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளிலும் நீட் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. சமத்துவமின்மையைக் குறைப்பதற்கு பதிலாக, கற்றலின் மையத்தை பள்ளிக்கூடங்களிலிருந்து பயிற்சி மையங்களுக்கு நீட் மாற்றிவிட்டது. இதன் பயனை, அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதியுள்ள மாணவர்கள் அதிகமாக அனுபவிக்கின்றனர். அதேவேளையில், கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள்கடுமையாகப் பின்னடைவைச் சந்திக்கின்றனர்.
நாடு முழுவதற்குமான ஒரே நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அல்ல.
நீட் தேர்வில் இதுவரை நடந்தவையே, ‘தகுதி’ என்ற பெயரில் முன்வைக்கப்படும் வாதத்தின் மாயையை மேலும் அம்பலப்படுத்துகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதித் தேர்ச்சி வரம்பு மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. முதுநிலை மற்றும் உயர் சிறப்புப் படிப்புகளுக்கான சேர்க்கைகளில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதற்காக, தகுதிக்கான பெர்சென்டைல் பலமுறை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது;
சில நேரங்களில் பூஜ்ஜியத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுமுறையானது உண்மையிலேயே தகுதியால் நிர்வகிக்கப்பட்டிருந்தால், இத்தகைய அசாதாரணமான தளர்வுகளுக்கான தேவையே எழுந்திருக்காது. உண்மை நிலை இதற்கு முற்றிலும் மாறானது. குறைந்த எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்காக ஏழை மாணவர்கள் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால், பொருளாதார வசதி படைத்தவர்கள் மிகவும் தளர்வான தகுதி அளவுகோல்களிலேயே தனியார் மருத்துவக் கல்வியைப் பெற முடிகிறது. இது தகுதியை முன்னிறுத்துவது அல்ல; வசதி படைத்தவர்களின் ஆதிக்கத்தை அமைப்புரீதியாக நிலைநிறுத்தும் முறையாகும். நீட் மருத்துவக் கல்வியின் வணிகமயமாக்கலை கட்டுப்படுத்தியுள்ளது என்பது மற்றுமொரு தவறான நம்பிக்கை. நீட்டை மையமாகக் கொண்ட ‘கோச்சிங் சென்டர்’ தொழில், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகமாக வளர்ந்துள்ளது.
நீட்டுக்கு தங்கள் பிள்ளைகளை தயார்படுத்துவதற்காக, குடும்பங்கள் பல ஆண்டுகளாக பெரும் தொகைகளைச் செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நீட்டை அகற்றுவதாக வாக்குறுதியளித்த பொருளாதாரச் சுமை மறைந்துவிடவில்லை; அதன் வடிவம்தான் மாறியுள்ளது. கேப்பிடேஷன் கட்டணத்துக்கு பதிலாக, பயிற்சி மையக் கட்டணம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பிரச்னைகளை தொடக்கத்திலேயே உணர்ந்த மாநிலம் தமிழ்நாடு. நீட்டிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றியது.
ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தார். மாணவர் சேர்க்கை முறைகளில் நிலவும் பன்முகத்தன்மையால் கல்வித் தரம் பாதிப்படையாது. அவசரமாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் அகில இந்திய ஒதுக்கீடு முறையாகும். நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உருவான இந்த முறை, மாநிலங்களின் நிதியில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களில் ஒரு பகுதியை மத்திய தொகுப்பிற்கு மாற்றுகிறது. இதன் மூலம் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சமூகநீதி ஆகியவை பலவீனப்படுத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள், தேர்வு நடத்தும் முறைகளை மட்டும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை அல்ல. பெரும் தொகையையும் காலத்தையும் பணயமாக கோரும் தேசிய நுழைவுத் தேர்வுகள் என்ற ஒட்டுமொத்த கட்டமைப்பையே அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான எச்சரிக்கை மணியாக அவை அமைய வேண்டும்.
மாநிலங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், மருத்துவத் துறையினர் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரோடும் திறந்த மனதுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். மருத்துவக் கல்வியின் எதிர்காலம் இன்னும் நியாயமான, கூட்டாட்சி தத்துவத்தை மேலும் மதிக்கும் அணுகுமுறையைக் கோருகின்றது.
* வாள் தூக்கி நிற்கும் படை திமுக
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம். அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
