சென்னை: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறிய நிலையில், துறையின் அமைச்சரோ ஜனநாயகன் படம் பார்த்து ‘செல்பி’ பதிவிட்டுக் கொண்டிருப்பதாக எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு? இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி செல்பி பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க ‘விடுமுறை’ போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன. நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
