கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி நகரின் அருகாமையில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சுமார் 60க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகள் இயங்கி வருகின்றன. இதில், தமிழ்நாடு-கர்நாடகா மாநிலத்தை இணைக்க கூடிய கிருஷ்ணகிரி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி நகருக்கு அருகில் டோல்கேட் அமைந்துள்ளது. இந்த டோல்கேட் வழியாக 24 மணி நேரமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன.
அதேபோல், ஓசூர் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், இந்த டோல்கேட்டை கடந்து கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. இந்த டோல்கேட் கிருஷ்ணகிரி நகராட்சி எல்லை முடிவிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மாவட்ட கலெக்டர் அலுவலகமும், எஸ்பி அலுவலகமும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் அமைந்துள்ளன.
கிருஷ்ணகிரியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், இந்த அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இதில், பலரும் வாகனங்களில் சென்று வருவதால், நாள் ஒன்றுக்குப் பலமுறை கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதேபோல், கிருஷ்ணகிரியில் இருந்து போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் டாக்டர்கள், நோயாளிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கிருஷ்ணகிரி நகரைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கிருந்து விளைபொருட்களை கிருஷ்ணகிரி சந்தைகளுக்கு கொண்டு வர டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.
கிருஷ்ணகிரி நகரின் அருகாமையில் உள்ள கிராமங்களிலிருந்து விளை பொருட்களை கொண்டு வரும் போது, சுங்க சாலையை சுமார் ஒரு கி.மீ. தொலைவிற்கு கூட பயன்படுத்தாத நிலையில், கட்டணம் கட்ட வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பண்டிகை காலங்கள், விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த டோல்கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் அனைத்து தேவைகளுக்கும், தலைமை அலுவலகமாகச் செயல்படும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ள இடத்துக்கும், நகரில் உள்ள பஸ் நிலையத்துக்கும் இடையே இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
எனவே, இந்த டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. அதே போல், தேர்தலின் போது அரசியல் கட்சியினரும் டோல்கேட்டை இடமாற்றம் செய்வதாக வாக்குறுதிகளாக கூறி வருகிறார்கள். எனவே, இந்த சுங்கச்சாவடியை குருபரப்பள்ளியை தாண்டி சின்னாறு அருகில் இடமாற்றம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
