குமரி: சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் சிறப்பு பூஜை எனக் கூறி பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். பக்தர்களுக்கு போலி ரசீது வழங்கி பல மாதங்களாக மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலாகும். இக்கோயிலுக்குத் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகிறார்கள். இங்குள்ள மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சன்னதியாகும். மேலும், இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாத்துதல் போன்ற வழிபாடுகளுக்கும் மற்றும் சிறப்புத் தரிசனத்திற்கும் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரே நேரத்தில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளுக்காகப் பக்தர்களிடம் பணம் வசூலித்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது குறித்து ஊர் மக்களும் அப்பகுதியின் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இச்சூழ்நிலையில், கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் நிதித் தணிக்கை (Auditing) நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தணிக்கையில், மே மாதக் கணக்கில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முரண்பாடு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, கோயிலில் பணியாற்றுபவரிடம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையில், ஒரு மாதக் கணக்கில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி முரண்பாடு இருந்தது கண்டறியப்பட்டு, அது குறித்து அவரிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இந்த விளக்கங்களின் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அவர் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி, தற்போது கடந்த இரண்டு மாதங்களுக்கான கணக்குத் தணிக்கை (Auditing) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ‘போலி ரசீதுகள் அச்சடிக்கப்பட்டது’ என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றும், அவ்வாறு ஏதேனும் புகார்கள் வந்தால் அது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதி முறைகேட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
