10 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியினர் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சத்தியமங்கலம் : ஈரோடு, கோவை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியினர் நலத்துறை தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளியில் நடைபெற்றது.

பழங்குடியினர் நலத்துறை மற்றும் மதி பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுடலை மணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தனி தாசில்தார் ரவி சங்கர், சுடர் இயக்குனர் நடராஜ் முன்னிலை வகித்தனர்.

கருத்தாளர்கள் அஜிதா பாரதி, பால் ஷியாம்பாக், நவீன் குமார் ஆகியோர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமூக உணர்வு சார் கற்றல், ஒலியியல் மூலம் வாசிப்புத் திறன் மேம்பாடு, மாணவர் மையக் கற்றல், வகுப்பறை மேலாண்மை மற்றும் மாணவர் ஈடுபாட்டு உத்திகள், தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் கற்றல் கண்காணித்தல், கற்பித்தல் – கற்றல் வளங்கள் மற்றும் பயன்பாடு, ஆசிரியர் வழிகாட்டி பயன்பாடு, அனுபவ பகிர்வு மற்றும் சிறந்த நடைமுறைகள், குழு செயல்பாடுகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள், கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:2025 செப்டம்பர் மாதத்தில், தமிழ்நாட்டின் அரசு பழங்குடியினர் பள்ளிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

தொடர்ந்து ஆசிரியர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளுடன் குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆழமான நேர்காணல்கள் நடத்தப்பட்டு, பள்ளிகளின் உண்மையான தேவைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2026-27 கல்வியாண்டு முழுவதும் அரசு பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தல் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில் இப்பயிற்சி நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இப்பயிற்சியில் 10 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியினர் நலத்துறை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: