ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானராஜ், விக்னேஷ், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து 30 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வீட்டில் பதுக்கிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று இளைஞர்களை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். போதை மாத்திரைகள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், குந்துபாயூர் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, குந்துபாயூரைச் சேர்ந்த முபாரக் அலி மகன் ஜாபர் அலி (21), தவிட்டுப்பாளையம், வேங்கையன் வீதியைச் சேர்ந்த வெங்கடேஷன் மகன் விக்னேஷ் (26), புதுப்பாளையம் வஉசி நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஞானராஜ் (31) ஆகியோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், போதை மாத்திரைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், தலா 30 மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: