கோவை: கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளக்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே கடந்த 15ம் தேதி மாலை 6.30 மணியளவில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துடியலூர் காவல் நிலைய இரண்டாம் நிலை போலீஸ்காரர் வினோத்குமார் (32) என்பவர் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணை மட்டும் தனியாக விசாரணை நடத்துவதாகக் கூறி வினோத்குமார் தனி இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரிடம் போலீஸ்காரர் வினோத்குமார் பாலியல் ரீதியாக அத்துமீறி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் தனது ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ஆண் நண்பர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, வினோத்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
