சிறந்த நடிகைக்கான தேசிய விருது; இந்த விருது ஒரு கனவின் முடிவு அல்ல, ஒரு பெரிய பொறுப்பின் தொடக்கம்!: நடிகை யாமி கவுதம் உருக்கம்

புதுடெல்லி: 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ‘ஆர்டிக்கல் 370’ படத்திற்காக தனது திரையுலக வாழ்க்கையின் முதல் ‘சிறந்த நடிகைக்கான’ தேசிய விருதை, நடிகை யாமி கவுதம் பெற உள்ளார். இதையடுத்து அவர் சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒவ்வொரு பயணத்திலும் நாம் ஏன் எதையும் கைவிடாமல் தொடர்ந்து போராடினோம் என்பதை நினைவூட்டும் ஒரு தருணம் வரும். அது இன்று கிடைத்துள்ளது. இந்த விருதை பெறுவது, என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றி மதிக்கக்கூடிய ஒரு கௌரவமாகும்.

கடந்த 14 ஆண்டுகளாக, என் கலைத்திறனுக்கு உண்மையாக இருக்கவும், நேர்மையுடன் பணியாற்றவும், என் நடிப்பின் மூலமே என் திறமையை வெளிப்படுத்தவும் மட்டுமே முயன்று வந்துள்ளேன். நம்பிக்கை, விடாமுயற்சி, மன உறுதி மற்றும் சினிமாவின் மீதான அசைக்க முடியாத காதல் நிறைந்த என் பயணத்தின் உச்சகட்டமாக இந்த அங்கீகாரம் எனக்கு தோன்றுகிறது. பல ஆண்டுகளாக என் இதயத்தில் சுமந்து வந்த கனவு இது; இன்று மிகுந்த நன்றியுணர்வுடனும் பணிவுடனும் இதனை ஏற்றுகொள்கிறேன்.

‘ஆர்டிகிள் 370’ எனக்கு வெறும் மற்றொரு திரைப்படம் மட்டுமல்ல, நான் ஆழமாக நம்பிய ஒரு கதை. இது எங்கள் சொந்த தயாரிப்பில் உருவான படம் என்பது, இந்த அங்கீகாரத்தை இன்னும் உணர்வுப்பூர்வமானதாகவும் தனிப்பட்ட முறையிலும் எனக்கு நெருக்கமானதாக மாற்றுகிறது. இதற்காக நடுவர் குழுவிற்கும், இயக்குநருக்கும், மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும், ஒவ்வொரு ரசிகருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
என் குடும்பத்தினர், குழுவினர், நலம் விரும்பிகள் மற்றும் ஏற்றத்தாழ்வான காலங்களிலும் என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. இலக்கு வெகு தொலைவில் இருப்பதாக தோன்றியபோதும், தொடர்ந்து முன்னேறி செல்வதற்கான வலிமையை உங்கள் நம்பிக்கையே எனக்கு அளித்தது.

இந்த விருது ஒரு கனவின் முடிவு அல்ல; இது ஒரு பெரிய பொறுப்பின் தொடக்கம். தொடர்ந்து வளர்வதற்கும், சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும், முக்கியமான கதைகளை சொல்வதற்குமான தொடக்கம் இது. கனவுகள் நனவாகும்; ஆனால் அதற்கான தீவிரமான ஆர்வம் ஒருபோதும் தளராமல் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். தங்கள் தருணத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு கனவு காண்பவருக்கும் இந்த விருது சமர்ப்பணம்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: