தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் முதல்வர் விஜய் எச்சரிக்கை: பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் போடுவது, வீடியோ எடுக்க கூடாது. ஒழுங்காக தங்கள் துறை வேலைகளை கவனியுங்கள் என்று முதல்வர் எச்சரித்தார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18ம் தேதி ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட இருக்கிறது. தமிழகத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புது திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

வரும் 22ம் தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த சூழ்நிலையில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக பட்ஜெட் எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.

குறிப்பாக, தவெக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது, ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள் கொடுப்பது, திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, ரூ.20 லட்சம் கல்வி கடன் வழங்குவது, குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு, ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுபோன்ற அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவருமா? என்ற கேள்வி ெபாதுமக்களிடம் எழுந்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு செலவுகளை குறைத்து விட்டு மகளிருக்கு ரூ.2500 வழங்குவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்துவது என்றும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியது குறித்து ஒரு அமைச்சர் கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, நேற்று நடந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் கொஞ்சம் கோபமாக காணப்பட்டார். அனைத்து அமைச்சர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். அப்போது, ஆய்வு என்ற பெயரில் அரசு பள்ளி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று ரீல்ஸ் போடுவது, வீடியோ எடுப்பது போன்ற வேலைகளில் அமைச்சர்கள் ஈடுபடக் கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.

பள்ளிகளை கவனிக்க பள்ளிக்கல்வி துறை அமைச்சர் உள்ளார். மற்ற அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை சார்ந்த பணிகளை கவனமுடன் பார்த்துக் கொண்டால் போதும். பொதுமக்கள் குறை சொல்லாத அளவுக்கு அமைச்சர்கள் செயல்பட வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.

அதற்காக இப்போதே தயாராகுங்கள். தவெக அரசு லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும். அமைச்சர்கள் மீது புகார் வந்தால் தெரிந்தவர், தெரியாதவர் என பார்க்க மாட்டேன். ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பேன். ஒரு சில அமைச்சர்களின் பெயரை சொல்லி, அவர்கள் மீது சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் நில மோசடி புகார் குறித்தும் விளக்கம் கேட்டார் என்றார்.

Related Stories: