சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம் 3-ல் பழைய மகாபலிபுரம் சாலையில் அஸ்திவார தூண்கள் மற்றும் U-Girder அமைக்கும் பணிகள் 100% நிறைவு!

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ், மாதவரம் மற்றும் சிப்காட் இடையேயான 3-வது வழித்தடத்தில் ஒப்பந்தத் தொகுப்பு C3/EV-01 லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளில் இரண்டு முக்கிய மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன. இப்பணியில், பழைய மகாபலிபுரம் சாலையில் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை, மொத்தம் 3,066 அஸ்திவார தூண் அமைக்கும் (Piling works) பணிகளைத் திட்டக் குழுவினர் 100% வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

மேலும், இந்தத் திட்டத்தில் 582 முன்வார்க்கபட்ட யு-வடிவ கான்கிரீட் தூண் விட்டங்கள் (precast U-Girders) தயாரிக்கும் பணியும் 100% முழுமையாக நிறைவடைந்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன், பொது மேலாளர் திரு. சி. செல்வம் மற்றும் பொது ஆலோசகர் NKAB குழுத் தலைவர் திரு. டோனி பர்செல் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் செம்மஞ்சேரியில் உள்ள கான்கிரீட் முன்வார்ப்பு உற்பத்தி கூடத்திற்கு (Casting Yard) நேரில் சென்று, இறுதி கான்கிரீட் தயாரிக்கும் பணியை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

பரபரப்பான பழைய மகாபலிபுரம் சாலையில், போக்குவரத்து நெரிசலுக்கு இடையே இரவும் பகலும் தூண் அமைக்கும் (Piling) பணிகளை மேற்கொள்வதற்கு மிகத் துல்லியமான மற்றும் கட்டம் கட்டமாக திட்டமிடப்பட்ட கட்டுமான முறை தேவைப்பட்டது. குறிப்பாக, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய முக்கிய சந்திப்புகளில், வாகனப் போக்குவரத்து எவ்வித தடங்கலும் இல்லாமல் சீராகச் செல்வதை உறுதி செய்யும் அதே வேளையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேம்பாலங்களுடன் இரண்டு மெட்ரோ இரயில் நிலையங்களை இணைத்து கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தகைய கடுமையான போக்குவரத்து மற்றும் இடநெருக்கடி சவால்களுக்கு மத்தியிலும், மெட்ரோ குழுவினர் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 185 தூண்களை அமைத்து சாதனை படைத்தனர். மேலும், சோழிங்கநல்லூர் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த மிகக் கடினமான பாறைகளால் கட்டுமானப் பணியில் சவால்கள் ஏற்பட்டன. எனினும், மேம்பட்ட பொறியியல் நுட்பங்கள் மற்றும் நவீன சிறப்பு இயந்திரங்களைச் சரியாகப் பயன்படுத்தியதன் மூலம், இந்த சவாலையும் குழுவினர் வெற்றிகரமாக முடித்தனர்.

செம்மஞ்சேரியில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் அமைத்த 35 ஏக்கர் கான்கிரீட் முன்வார்ப்பு உற்பத்தி கூடம் (Casting Yard) மூலம், 30 மீட்டர் நீளமுள்ள மேம்பாலப் பகுதிக்கான கார்டர்கள் மற்றும் 17.5 மீட்டர் நீளமுள்ள நிலையப் பகுதிக்கான கார்டர்கள் என மொத்தம் 582 ‘யு-கார்டர்கள்’ (U-Girder) வெற்றிகரமாக தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன. முறையான திட்டமிடல் மற்றும் கடுமையான தரக்கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதன் மூலம், கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 40 யு-கார்டர்கள் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

தற்போது அனைத்து அஸ்திவாரத் தூண் (Piling) பணிகளும், யு-கார்டர் தயாரிப்புப் பணிகளும் 100% முழுமையாக நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்தின் 3-வது வழித்தடப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க உதவும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதன் மூலம், பழைய மகாபலிபுரம் சாலையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப்போக்குவரத்து சேவை விரைவில் மக்களுக்குக் கிடைக்கும். இந்த சவாலான கட்டுமானப் பணிகளின் போது முழு ஒத்துழைப்பு வழங்கி, பொறுமை காத்த அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. பொதுமக்களுக்குக் குறைந்தபட்ச இடையூறுகளுடன், இப்பணிகளைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் முடிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Related Stories: