பணம் பறிக்கும் அமைப்பாக மாறிவிட்டது; கல்வித்துறையில் புரட்சி ஏற்பட வேண்டிய நேரம்: ராகுல் காந்தி கருத்து

 

புதுடெல்லி: இந்திய கல்வி முறை நேர்மையற்ற பணம் பறிக்கும் அமைப்பாக மாறிவிட்டதாகவும், கல்வித் துறையில் புரட்சி ஏற்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை, கல்விச் செலவு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகள் குறித்து ‘மாணவர்களின் குரல்’ என்ற இயக்கம் மூலம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

இதன் 2வது நிகழ்ச்சிக்கு முன்பாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: ஊழல், அநீதி, பாரபட்சம், நேர்மையின்மை ஆகியவை இந்திய கல்வி முறையை மாணவர்கள் வர்ணிக்கும் சொற்களாகிவிட்டன. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய கல்வி முறை, இன்று அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் கடன், மனஅழுத்தம் மற்றும் விரக்திக்குள் தள்ளுகிறது. கல்வித் துறையில் நிலவும் ஊழலே வினாத்தாள் கசிவு மாபியாக்களுக்கு வழிவகுத்துள்ளது.

கோடிக்கணக்கான மாணவர்களின் பல ஆண்டுகால உழைப்பை ஒரு நொடியில் பறித்துச் செல்கிறது. தவறு செய்த ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் பதவி உயர்வும் ஒப்பந்தங்களும் பெறுகின்றனர். ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்களே. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் மவுனம் காத்து பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றனர். பொறுத்தது போதும். இனி கல்வித் துறையில் புரட்சி அவசியம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: