கோயில் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களே வருத்தம் தெரிவித்தால் சரியா?.. ஆர்எஸ்எஸ் கருத்துக்கு காங். விமர்சனம்

 

கண்ணூர்: கர்நாடாகாவில் நடந்த ஆர்எஸ்எஸ் தேசிய மாநாட்டின்போது அயோத்தி ராமர் கோயிலில் நடந்த நன்கொடை திருட்டு குறித்து வருத்தம் தெரிவிப்பதாக கூறப்பட்டது. இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து கேரள மாநிலம் கண்ணூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வேணுகோபால்,‘‘அயோத்தி கோயில் விவகாரத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் நிதி முறைகேடு நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இது குறித்து ஆர்எஸ்எஸ் வருத்தம் தெரிவிப்பது மட்டும் போதாது. ஒரு திருடன் கொள்ளையடித்த பிறகு வருத்தம் தெரிவித்தால் அதோடு அந்த விவகாரம் முடிந்துவிடுமா? கோயில் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களே வருத்தம் தெரிவித்தால் அந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடுமா?

இது நம்பிக்கையின் மீதான தாக்குதல் இல்லையா? கடந்த பல தசாப்தங்களாக அயோத்தியின் பெயரால் என்ன வகையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது? நாம் அனைவரும் இறை நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் அந்த நம்பிக்கையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அயோத்தியில் மட்டுமல்ல. பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய இடங்களிலும் இது நடந்துள்ளது. இந்து சமூகத்தின் மிகவும் புனிதமான கோயில்களை பாஜ மற்றும் சங்பரிவார் ஆகியவை கொள்ளையடிப்பதற்காகவே சுரண்டுகின்றன. அவர்களை பொறுத்தவரை நம்பிக்கை என்பது கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கோ அல்லது மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதற்கோ ஒரு கருவி மட்டுமே. இப்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்றார்

Related Stories: