புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையை கைப்பற்றுவது தொடர்பான விவகாரத்தில் அதிருப்தி பிரிவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அதிருப்தி தலைவர் ரிதப்ரதா பானர்ஜிக்கும் இடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையை கைப்பற்றுவது தொடர்பாக தீவிர அரசியல் மோதல் நிலவி வருகிறது.
கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ரிதப்ரதா பானர்ஜி தன்னை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்துக் கொண்டதுடன், திரிணாமுல் காங்கிரசின் உண்மையான தலைமை தங்கள் பிரிவு தான் என தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரியுள்ளார். இதுதொடர்பாக மம்தா, ரிதப்ரதா தரப்பு கடந்த 6ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மம்தா தரப்பில் பதிலளிக்கப்பட்ட நிலையில், ரிதப்ரதா தரப்புக்கு கடந்த 10ம் தேதி வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டது. ஆனால் அதிலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் பதிலை சமர்பிக்கவில்லை.
இந்நிலையில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணிக்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மேலும் கால அவகாசம் வழங்குவது தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும், தனது தரப்பு அளித்த பதிலை மட்டுமே பரிசீலித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். 2022ல் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் அமைப்புக் குழுக்கள் 2027 வரை செல்லுபடியாகும் என்றும், எதிரணியின் கோரிக்கை சட்டரீதியாகவும் உண்மைக்குப் புறம்பானது என்றும் மம்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
