சென்னை: மதுக்கடையை அகற்றக்கோரிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடத்துவதா என்று தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன், டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோடாலியில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது முதல்வர் விஜய் அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்த நான்கு பள்ளி மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நியாயமான கோரிக்கைக்காக போராடிய பெண் குழந்தைகளை தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம் என தேர்தல் களத்தில் முழங்கிய முதல்வர் விஜய், தற்போதைய அராஜக சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?. தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது வெறும் காகித விளம்பரமே என்பதை கோடாலி கிராமத்தில் நடந்த இந்த கொடூர தடியடிச் சம்பவம் உலகிற்கு தோலுரித்துக் காட்டியுள்ளது. மதுவின் பிடியில் இருந்து தங்களை காக்கப் போராடிய பிஞ்சுக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தவெக அரசு உடனடியாக கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணி காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும்.
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி இருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும்.இவ்வாறு கூறி உள்ளனர்.
குதிரை பேரம் விஸ்வரூபம்
த மிழக அரசியலில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு சொல் தான் குதிரை பேரம். குதிரை பேரம் என்ற வார்த்தை 1820ம் ஆண்டில் இருந்தே புழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த காலத்தில் போக்குவரத்து, போர் எனப் பல்வேறு விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டவை குதிரைகள் தான். இதனால், குதிரைகள் விலைமதிப்பு மிக்கவை. எனவே, குதிரை வியாபாரிகள் பலரும் தங்களது குதிரைகளை விற்கவும், வாங்கவும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி விலை பேரம் பேசுவார்கள். அதைப்போலவே, மாற்று கட்சிகளின் எம்எல்ஏ அல்லது எம்பிக்களை தங்கள் கட்சிக்கு இழுப்பதற்காக பேரம் பேசுவதை அரசியலில் குதிரை பேரம் என்று சொல்கிறார்கள்.
கட்சி மாறும் எம்எல்ஏக்கள் சட்ட ரீதியாக மட்டுமல்ல, ஒழுக்க ரீதியாகவும் தவறானதாகும். இது ஏறக்குறைய லஞ்சம் கொடுப்பதற்கு சமம் என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். குதிரை பேரத்தால் ஜனநாயகத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. மக்கள் ஒரு வேட்பாளரை ஒரு கட்சியின் கொள்கையை நம்பி தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த பிரதிநிதி பின்னர் பணம் அல்லது பதவிக்காக வேறு கட்சிக்கு ஆதரவளித்தால், அது மக்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகமாக பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் நிலைத்தன்மை குலைவது, ஊழல் அதிகரிப்பது, அரசியலில் மக்கள் நம்பிக்கை இழப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க மொத்தம் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் விஜய் கட்சிக்கு ஆதரவு அளித்தன. ஆனாலும் அதிமுக எம்எல்ஏக்களை தவெக களவாடுகிறது. இதுவரை அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து உள்ளனர். தொடர்ச்சியாக, முன்னணி நிர்வாகிகளும் இணைந்தனர்.
இந்நிலையில், மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை தக்க வைக்கும் செயலில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக, பாஜ ஆகிய கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளன. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தலைமை செயலகத்தை கட்சி அலுவலகம் போல மாற்றி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து குதிரை பேரம் செய்வது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சிகள் கோரியுள்ளன. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக புகார் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த 6 பேர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
திமுக எம்எல்ஏ ஆஸ்டினிடம் தவெகவினர் குதிரை பேரம் நடத்தியுள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து தவெகவில் இணையுமாறு வற்புறுத்தியுள்ளனர். கட்சியில் மாற தவெகவினர் தன்னை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அதில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தவெக அரசு அமைந்து 2 மாதங்கள் உருண்டு ஓடிவிட்டது. முதல்வர், அமைச்சர்களின் பேச்சு ஆட்சி தான் இருக்கிறது. செயல் ஆட்சி இல்லை. அரசை காப்பாற்றும் நோக்கத்தில் அடுத்தடுத்து செயல்படும் தவெக அரசின் குதிரை பேரம் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
