கனடாவில் நிஜ்ஜார் கொலை வழக்கு இந்திய சிறையில் இருக்கும் பிஷ்னோய், பிரார் மீது குற்றச்சாட்டு பதிவு: அமெரிக்க போலீசார் நடவடிக்கை

வாஷிங்டன்: கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொலை செய்ய உத்தரவிட்டதாக இந்தியாவில் சிறையில் இருக்கும் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளியான கோல்டி பிரார் ஆகியோர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. கனடாவை சேர்ந்த குடிமகனான நிஜ்ஜார் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவை இந்த கொலையுடன் தொடர்புபடுத்த முயன்றார்.

இதன் காரணமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன. ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்களை அர்த்தமற்றவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என்று இந்தியா நிராகரித்தது. இந்நிலையில் ஆபரேஷன் ஹார்ட்பால் என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையின் கீழ் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் சட்ட அமலாக்கத் முகமைகள் 24 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 11 பேர் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நிஜ்ஜார் படுகொலை உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவை மையமாக கொண்ட மூன்று சர்வதேச குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக அமெரிக்கா நேற்று முன்தினம் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கையின் நீதிமன்ற ஆவணங்களில் எச்எஸ்என் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிஜ்ஜாரை கொலை செய்வதற்கு உத்தரவிட்டதாக இந்திய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளியான கோல்டி பிரார் ஆகியோர் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளது.

பிஷ்னோய் இந்திய சிறையில் உள்ள நிலையில், அவரது கூட்டாளியை கைது செய்ய உதவும் தகவல்களை அளிப்பவர்களுக்கு 50ஆயிரம் அமெரிக்க டாலர் வெகுமதி வழங்கப்படும் என்றும் எப்பிஐ அறிவித்துள்ளது. மேலும் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்சில் உள்ள நீதிமன்றத்தில் பிரார்க்கு எதிராக கடந்த ஒன்றாம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையின்படி பிஷ்னோய் அமைப்பின் வட அமெரிக்க தலைவர் பிரார், ஐரோப்பிய தலைவரான ராஜஸ்தானை சேர்ந்த ரோஹித் கோதாரா மற்றும் பஞ்சாபை சேர்ந்த சுகராஜ் சிங் காங் ஆகியார் செயல்பட்டுவந்துள்ளனர்.

இவர்கள் பாதிக்கப்பட்டவர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ வன்முறை மூலம் தாக்குவதாக மிரட்டி வாட்ஸ்அப் மற்றும் பிற செய்தி பரிமாற்ற செயலிகள் வழியாக பணம் பறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட மூன்று குற்றப்பத்திரிக்கைகளில் மொத்தம் 37 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் இந்திய சிறையில் இருந்தபடியே தங்களது குற்ற கும்பலை இயக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள் இந்த கொலைக்கும் இந்திய அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை என்று கனடா போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கனடா மற்றும் இந்தியா இடையிலான உறவில் கடும் விரிசலை ஏற்படுத்திய அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முந்தைய குற்றச்சாட்டுக்களுக்கு இது நேரடி முரண்பாடாக அமைந்துள்ளது.

நிஜ்ஜார் படுகொலைக்கு உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே ராயல் கனடிய மவுண்டட் போலீசின் துணை ஆணையர் லிசா மோரலேண்ட் கூறுகையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை மற்றும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அல்லது குற்றப்பத்திரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கோ அல்லது அவர்கள் இதில் ஈடுபட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.

Related Stories: