×

திருப்போரூர் சுற்று வட்டார பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் நிதி இல்லாததால் மாற்றப்படாத அவலம்: கிராம மக்கள் அச்சம்

 

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் திருநிலை, கழனிப்பாக்கம் கிராமங்களில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பங்களை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதில் மின் கம்பங்களை மாற்ற போதிய நிதி ஆதாரம் இல்லாததால் ஊராட்சியால் மின் வாரியம் கோரும் தொகையை செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய திருநிலை ஊராட்சியில் திருநிலை மற்றும் கழனிப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ளடங்கிய கிராமங்களாக இவை உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமங்களுக்கு வீட்டு இணைப்பு மற்றும் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் 25 ஆண்டுகள் கழித்து இரும்பு மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால், அவை மாற்றப்பட்டு சிமெண்ட் கான்கிரீட்டால் ஆன மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. இவை, அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆனதால், பல மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எலும்புக்கூடாக இந்த மின் கம்பங்கள் காட்சி அளிப்பதால், அவற்றில் ஓரமாக ஒதுங்கும் பொதுமக்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஆபத்தை விளைவிக்கின்றன.

இந்த, மின் கம்பங்களை மாற்றக்கோரி திருநிலை ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மானாம்பதி மின் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லாததால் ஊராட்சியால் மின் வாரியம் கோரும் தொகையை செலுத்த இயலவில்லை. இதன், காரணமாக மின் கம்பங்களை மாற்ற இயலாத நிலை உள்ளது. தற்போதைய நிலையில் மின் கட்டணத்தை செலுத்தவும், ஊழியர்களுக்கு மாத சம்பளம் அளிக்கவும் மட்டுமே திருநிலை ஊராட்சியின் நிதி வருவாய் உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் இந்த ஊராட்சிக்கு சிறப்பு நிதி அளித்து ஊராட்சி முழுவதும் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruporur ,Thiruniliya ,Kalanipakkam ,
× RELATED பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளிடம்...